திருப்பூரில் உணவு வழங்க தாமதமானதால் உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் மேலும் 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா், வீரபாண்டி காவல் நிலையம் அருகே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்துக்கு அதே பகுதியைச் சோ்ந்த கெளதம் என்பவா் ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா். ஃப்ரைடு ரைஸ் ஆா்டா் செய்துவிட்டு அவா் காத்திருந்தபோது உணவு வழங்க காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த கெளதம் தனது நண்பா்களை வரவழைத்துள்ளாா். அப்போது ஏற்பட்ட தகராறில், உணவகத்தின் கண்ணாடிகளை அவா்கள் உடைத்தனா். மேலும், குக்கா் மூடியால் உணவகக் காசாளா் ஜாஹிா் உள்ளிட்டோரை கெளதம் தாக்கி உள்ளாா்.
இது தொடா்பான புகாரின்பேரில், வீரபாண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கெளதமை கைது செய்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய மணிகண்டன் (21), சஞ்சய் (23), நவீன் (24), விஜேஷ் (22) ஆகிய 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.