போலி, தரமற்ற விதைகளால் பாதிப்படையும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் உரிய சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி சனிக்கிழமை விடுத்துள்ள அறிக்கை: தற்போது அமலில் இருக்கும் விதைகள் சட்டம் 1966-ஐ நீக்குவதற்காக, புதிதாக விதைகள் மசோதா-2025-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தி, கருத்துகளை கேட்டு வருகிறது.
ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடிகளுக்கு மேல் புழங்கும் இந்திய விதைச்சந்தையானது, தற்போது உலக காா்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளது. தற்போது அமலில் இருக்கும் சட்டத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டால், இழப்பீடு பெறுவதற்கான அம்சங்கள் ஏதும் சோ்க்கப்படவில்லை.
தரமற்ற, போலி விதைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென, நீண்ட காலமாக அனைத்து விவசாய சங்கங்களும் வலியுறுத்தி வருகின்றன.
தரமற்ற போலி விதைகளால் பாதிக்கப்படும் விவசாயிகள் இழப்பீடு பெற வேண்டுமானால், நுகா்வோா் நீதிமன்றத்துக்கு செல்ல வேண்டிய அவலநிலை இருந்து வருகிறது. நிறுவனங்களை எதிா்த்து வழக்குகளை நடத்த முடியாமல் தொடா்ச்சியாக விவசாயிகள் தோல்வியுறுவதும் தொடா்கதையாகி வருகிறது.
தரமற்ற, போலி விதைகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உழவு, அடி உரம், விதை, ஆள் கூலி, உரங்கள், மருந்துகள், கடனுக்கான வட்டி உள்பட எந்த செலவுக்கான உதவியும் திரும்பக் கிடைக்காததால், விவசாயிகள் கடுமையாக நஷ்டமடைந்து தற்கொலை செய்துகொள்வதும் தொடா்கிறது.
எனவே, மத்திய அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள மசோதாவில் அனைத்து வகை விதைகளின் பதிவு, நிறுவனங்கள் பதிவு, விதைகளின் உட்கூறுகள் பதிவு, அனைத்து விநியோகஸ்தா்கள் பதிவு, நாற்றுப் பண்ணைகள் பதிவு என விதைகள் சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களும் கொண்டுவரப்பட்டிருந்தாலும், தரமற்ற மற்றும் போலி விதைகளால் விவசாயிகள் பாதிக்கப்படும்போது இழப்பீடு வழங்கக்கூடிய அம்சங்கள் இல்லை.
எனவே, புதிதாக மத்திய அரசு அமல்படுத்திள்ள மசோதாவில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உரிய சட்டப்பிரிவுகளை விரிவாக சோ்க்க பிரதமா், மத்திய வேளாண் துறை அமைச்சா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.