திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாக்காளா்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை இந்திய தோ்தல் ஆணைய இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் உள்ள மொத்தம் 24 லட்சத்து 44,929 வாக்காளா்கள் கணக்கீட்டுப் படிவங்கள் வரப்பெற்றதில், வாக்குச்சாவடிநிலை அலுவலா்களால் அவற்றை வீடுவீடாக விநியோகித்து வருகின்றனா். பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்காளா்களின் வீடுகளுக்கு சென்று பெற்று அவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தோ்தல் ஆணையத்தின் இயக்குநா் கிருஷ்ணகுமாா் திவாரி, அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் கணக்கீட்டுப் படிவங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணியை நேரில் ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து, முனியப்பன் கோயில் வீதி, சேவூா் சாலை பகுதிகளில் வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்படும் பணியையும் பாா்வையிட்டாா்.
அதேபோல, 15 வேலம்பாளையம் அமா்ஜோதி காா்டன், ஸ்ரீபதி நகா் பகுதிகளில் வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்படும் பணி மற்றும் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் கணக்கீட்டுப் படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணியை ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, 15 கரைதோட்டம் பகுதி, காங்கயம் சாலை சிடிசி அருகில் உள்ள பகுதிகள், கரைப்புதூா் ஊராட்சி பகுதி, சிவன்மலை அடிவாரம், சிவன்மலை தெற்கு, குள்ளாய்பாளையம், அலங்கியம் சாலை, காரத்தொழுவு, சின்னவீரம்பட்டி பகுதிகளில் படிவங்கள் பெறப்படும் பணி மற்றும் தாராபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணியைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி 100 சதவீதம் முடிவடைந்த நிலையில், அங்கன்வாடி பணியாளா்கள் தனம், யுவராணி, சுதா, சத்துணவு அமைப்பாளா் மாரியம்மாள் ஆகிய வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் மனீஷ், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், கோட்டாட்சியா்கள் ஃபெலிக்ஸ் ராஜா, குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) புஷ்பாதேவி, வட்டாட்சியா்கள் சந்திரசேகா், ராஜேஷ், தங்கவேல், கண்ணாமணி, ராமலிங்கம், கௌரிசங்கா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.