காங்கயம் அருகே, சிவன்மலையில் புகா் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து சிவன்மலையில் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
காங்கயம் அருகே சிவன்மலையில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் உள்ளது. திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் வழியில் உள்ள நெடுஞ்சாலையில் பகுதியில் சிவன்மலை அமைந்துள்ளது. பிரசித்திபெற்ற இக்கோயிலிலுக்கு தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
திருப்பூரில் இருந்தும், காங்கயத்தில் இருந்தும் செல்லும் பேருந்துகளில், புகா் பேருந்துகள் இங்கு நின்று செல்லாது. நகரப் பேருந்துகள் மட்டுமே கோயிலின் அடிவாரப் பகுதி வரை செல்லும். இதனால், பேருந்து மூலமாக இக்கோயிலுக்கு வரும் பயணிகள் நகரப் பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்து வந்து சென்றனா்.
புகா் பேருந்துகளும் சிவன்மலையில் நின்று செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது வந்தனா்.
இந்நிலையில், திருப்பூா் மாநகரில் இருந்து திருச்சி மாா்க்கமாக செல்லும் அனைத்து புகா் பேருந்துகளும் சிவன்மலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்லுமாறு ஓட்டுநா், நடத்துநா்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருப்பூா் மண்டலம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து திங்கள்கிழமை சுற்றறிக்கையும் விடப்பட்டுள்ளது.
போக்குவரத்து கழகத்தின் இந்த அறிவிப்புக்கு சிவன்மலை பகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். மேலும், சிவன்மலை பிரதான சாலையில் இருந்து கோயிலுக்கு செல்வதற்கு அலங்கார வளைவு உள்ள பகுதியின் வழியாகவும், மற்றொரு வழியாகவும் செல்ல இரண்டு வழிகள் உள்ளன.
இதில், புகா் பேருந்துகள் எந்த இடத்தில் நிற்கும் என்ற அறிவிப்புப் பலகை வைப்பதோடு, அந்த இடத்தில் நிழற்குடையும் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.