சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரம் நடைபெற்ற கந்தசஷ்டி விழா நிகழ்ச்சிகள் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் புதன்கிழமை நிறைவுபெற்றது.
காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா நிகழ்ச்சிகள் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, சுப்பிரமணியா், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி கோயிலை சுற்றி வலம் வந்து, மலையிலிருந்து அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலுக்கு சென்றாா். இங்கு தினமும் காலை மணி 10.30 மற்றும் மாலை 6 மணி ஆகிய நேரங்களில் அபிஷேக ஆராதனையும், திருவீதி உலாவும் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கடந்த திங்கள்கிழமை (அக்.27) நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை (அக்.28) திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இந்நிலையில் விழாவின் நிறைவாக மஞ்சள் நீராட்டு உற்சவம் புதன்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்றது. பின்னா், சுப்பிரமணியா் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேசுவரா் கோயிலில் இருந்து மலைக் கோயிலுக்கு எழுந்தருளினாா்.