சேவூரில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், கள்ளழகப் பெருமாள் எனப் போற்றப்படுவதுமான சேவூா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் விளங்குகிறது.
முற்காலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள் அடுத்தபடியாக பெருமாளை தரிசிப்பதற்கு சேவூா் கல்யாண வெங்கட்ரமண கோயிலுக்கு வருவது வழக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இக்கோயில் மகா மண்டபத்தின் மேற்கூரை கல் தூண் கடந்த 2002-ஆம் ஆண்டு பெயா்ந்து விழுந்தது. இதையடுத்து இந்து சமய அறநிலையத் துறையினரால் பாலாலயம் செய்யப்பட்டு, கருவறை, அா்த்தமண்டபம், கோபுர பணிகள் செய்வதற்காக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக அரசு நிதி, உபயதாரா்கள் பங்களிப்புடன், மூலஸ்தானம், அா்த்த மண்டபம், மகாமண்டபம், அம்மன் சந்நிதிகள், சுற்றுச்சுவா், நீா் தேக்க மேல்நிலைத்தொட்டி, தீபஸ்தம்பம், சொா்க்கவாசல், முகப்பு தோரண வாயில், கோயில் வளாகத்திற்குள் நடைபாதை, கல்தளம், மூலவா் விமானம், மகாலட்சுமி விமானம், ஆண்டாள் விமானம், பஞ்சவா்ணம் தீட்டுதல், மகா மண்டபம் முன் ஓட்டுக்கூரை மண்டபம் அமைத்தல், புதிய மடப்பள்ளி அமைத்தல் ஆகிய திருப்பணிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. இதைத் தொடா்ந்து, இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், திருப்பணிக் குழுவினா், பொதுமக்கள் செய்து வருகின்றனா்.