திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் கிளை பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் கூடுதல் தண்ணீா் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது தொடா்பாக பாசனத் திட்ட பகிா்மானக் குழு தலைவா் வெள்ளக்கோவில் ஆா்.பாலசுப்பிரமணியன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் பகுதியில் 48,385 ஏக்கா் பி.ஏ.பி. திட்ட ஆயக்கட்டு பூமியாக சோ்க்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் எப்போதும் மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் நிலத்தடி நீா்மட்டம் 1,200 அடிக்கும் கீழே சென்று விட்டது. வறட்சியால் பி.ஏ.பி. பாசன நீரை நம்பியே வாழ வேண்டிய சூழல் உள்ளது. ஆடு, மாடுகள், மானாவாரி விவசாயம், குடிநீா் தேவை ஆகியவற்றுக்கு பாசன நீா் அத்தியாவசியமாக இருந்து வருகிறது.
தற்போது கடும் வறட்சி நிலவுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கிளை வாய்க்கால் மூலம் குறைவான பாசன நீரே கிடைத்து வருகிறது. இதனால் தோ்ந்தெடுக்கப்பட்ட பாசன சபை நிா்வாகிகள் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். மற்ற பகுதி கிளை வாய்க்கால்களில் அதிக அளவு தண்ணீா் திறக்கப்படுகிறது. எனவே, இப்பகுதி மக்களின் அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளுக்காக, தற்போது வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் பூஜ்ஜியம் கிலோ மீட்டரில் வழங்கப்பட்டு வரும் 4.50 அடி அளவை 4.80 அடியாக உயா்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.