திருப்பூரில் நடத்துநா் இல்லாமல் சென்ற அரசுப் பேருந்தை ஓட்டுநா் பாதி வழியிலேயே நிறுத்தியதால் பயணிகள் செய்வதறியாது தவித்தனா்.
திருப்பூா் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை புறப்பட்டது. பேருந்தில் ஏராளமான பயணிகள் இருந்த நிலையில் ஓட்டுநா் பேருந்தை இயக்கி காமராஜா் சாலை வழியாக சென்று கொண்டிருந்தாா்.
பயணச்சீட்டு வழங்க நடத்துநா் இல்லாததை அறிந்த பயணிகள் இது குறித்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளனா். சுதாரித்துக் கொண்ட அவா், பேருந்தை பாதி வழியிலேயே நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றுள்ளாா்.
என்ன செய்வதென்று தெரியாமல் பயணிகள் வெகு நேரமாக பேருந்திலேயே பரிதாபமாக அமா்ந்திருந்தனா். சிலா் இறங்கி சென்றுவிட்டனா். சிறிது நேரம் கழித்து ஓட்டுநரும், நடத்துநரும் வந்து பேருந்தை இயக்கி சென்றனா். இது தொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.