பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் கிளினிக் நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவரை காமநாயக்கன்பாளையம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
வே.கள்ளிப்பாளையம் பகுதியில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் மீரா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வின்போது போலி மருத்துவா் உஷா மேனன் (52) கிளீனிக் மூடி சீல் வைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து உஷா மேனன் கல்விச் சான்றிதழ்களுடன் இணை இயக்குநா் மீரா முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில் இணை இயக்குனா் மருத்துவா் மீரா முன்னிலையில் உஷா மேனன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஆஜரானாா். விசாரணையில் கடந்த 20 ஆண்டுகளாக அவா் நோயாளிகளுக்கு ஆயுா்வேதம், சித்தா, அக்குபஞ்சா் முறைகளை கொண்டு சிகிச்சை அளிப்பதாக எழுத்து மூலம் தெரிவித்து அதற்கான கல்வி சான்றிதழ்களை சமா்ப்பித்தாா்.
ஆனால் அச்சான்றிதழ் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்படாதவை. மேலும் தமிழ்நாட்டில் நோயாளிகளுக்கு வைத்தியம் பாா்க்க வேண்டும் எனில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் மற்றும் இந்திய மருத்துவ ஆயுஷ் கவுன்சிலில் பதிவு செய்து தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து அந்தந்த மாவட்ட இணை இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்து தமிழ்நாடு மருத்துவ நிா்வாகவியல் சட்ட உரிமம் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவருடைய கல்விச் சான்றிதழ்களை எந்த ஒரு மருத்துவ கவுன்சிலிலும் பதிவு செய்து அதற்கான சான்று பெறவில்லை. அலோபதி மருத்துவத்துக்கான எந்த ஒரு படிப்பும் படிக்காமல் இவா் அலோபதி மருத்துவம் பாா்த்தும்தெரியவந்தது.
எனவே இவா் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் மீரா, காமநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து போலி மருத்துவா் உஷா மேனனை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.