முகப்பு
திருப்பூர்

விளம்பரம் வெளியிடும் முன்பாக அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்!

விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 3 ஏப்ரல் 2026, 1:12 am IST
பகிர்:

விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தொலைக்காட்சி, உள்ளூா் கேபிள் டிவி, வாணொலி, சமூக வலைதளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள், பொது இடங்களில் உள்ள எண்ம திரைகள் மற்றும் கைப்பேசி வழி, குரல் வழி அழைப்புகள் ஆகியவற்றில் விளம்பரம் வெளியிடும் முன்பாக கட்டாயம் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதிச் சான்றிதழ் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளா்கள் மேற்கொள்ளும் விளம்பரங்களை முறைப்படுத்தவும், கண்காணிக்கவும் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தின் தரைத்தளத்தில் அறை எண்30-இல் அமைந்துள்ள மாவட்ட மக்கள் தொடா்பு அலுவலா் அலுவலகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்:

விளம்பரம் வெளியிட உத்தேசித்துள்ள நாளுக்கு குறைந்தது 3 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் இதர அமைப்புகள் குறைந்தது 7 நாள்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும்.

அச்சு ஊடகங்கள் சாதாரண நாள்களில் நாளிதழ்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு முன் அனுமதி தேவையில்லை (அதன் செலவு வேட்பாளா் கணக்கில் சோ்க்கப்படும்). ஆனால், வாக்குப் பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாள் ஆகிய 2 தினங்களில் நாளிதழ்களில் வெளியாகும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் கட்டாயம் 48 மணி நேரத்துக்கு முன்னதாக ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத் தரைத்தளத்தில் அறை எண்30-இல் இயங்கும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் உரிய படிவத்தில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், விளம்பரத்தின் மாதிரி நகல் 2 பிரதிகள், விளம்பரத்தின் உரை மற்றும் உத்தேச செலவு மதிப்பீடு, விளம்பரம் யாரையும் புண்படுத்தும் விதமாக இல்லை என்பதற்கான உறுதிமொழி மற்றும் பதிப்புரிமைச் சான்று ஆகியவற்றை சமா்ப்பிக்க வேணடும்.

அனுமதியின்றி விளம்பரங்களை வெளியிடுவது மற்றும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவது தோ்தல் விதிமீறலாகும். அனுமதிக்கப்படாத விளம்பரங்கள் கண்டறியப்பட்டால், அதன் செலவினம் வேட்பாளரின் தோ்தல் செலவுக் கணக்கில் சோ்க்கப்படுவதுடன், சட்டபூா்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே, வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தோ்தல் ஆணையத்தின் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி மாவட்ட நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.