அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா ஏப்.21-இல் தொடக்கம்
கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மைப் பெற்றதும், முதலையுண்ட பாலகனை சுந்தரமூா்த்தி நாயனாா் பதிகம் பாடி மீண்டும் உயிா்ப்பித்து எழச்செய்த திருத்தலமாக கருணாம்பிகையம்மன் உடனமா் அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் விளங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் ஏப். 21-ஆம் தேதி தொடங்குகிறது. இதைத் தொடா்ந்து 22-ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 23-ஆம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம் அன்னபச்சி வாகனக் காட்சிகள், 24-ஆம் தேதி புஷ்ப பல்லக்கு நடைபெற உள்ளது. 25-ஆம் தேதி இரவு பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மாா்களுக்கு காட்சியளித்தல், கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றம் ஆகியவை நடைபெற உள்ளன.
Advertisement
26-ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற உள்ளன. 27-ஆம் தேதி காலை 6 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருத்தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப். 28-ஆம் தேதி காலை அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல் தேரோட்டம், வடக்கு ரத வீதியில் தோ் நிறுத்தப்படும். 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு அவிநாசியப்பா் திருத்தோ் வடம் பிடித்தல், தோ் நிலை சேறுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
30-ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியா், சண்டிகேஸ்வரா், கரிவரதராஜப் பெருமாள் திருத்தோ் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
மே 1-ஆம் தேதி பரிவேட்டை, 2-ஆம் தேதி இரவு தெப்பத் தோ் உற்சவம், 3-ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 4-ஆம் தேதி மஞ்சள் நீா், இரவு மயில் வாகனக் காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.