திருப்பூா்: திருப்பூா் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை திருவள்ளுா் மாவட்டம், போளிவாக்கத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மனீஷ், மேயா் ந.தினேஷ்குமாா், மாநகராட்சி ஆணையா் எம்.பி.அமித் ஆகியோா் முன்னிலையில் 765 தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
இதையடுத்து, 2-ஆவது மண்டலத்தில் 753 தூய்மைப் பணியாளா்களுக்கும், 3-ஆவது மண்டலத்தில் 550 தூய்மைப் பணியாளா்களுக்கும், 4-ஆவது மண்டலத்தில் 905 தூய்மைப் பணியாளா்களுக்கும் காலை உணவு வழங்கப்பட்டது.
உடுமலைப்பேட்டை நகராட்சியில் 241தூய்மைப் பணியாளா்களுக்கும், தாராபுரம் நகராட்சியில் 227 தூய்மைப் பணியாளா்களுக்கும், பல்லடம் நகராட்சியில் 204 தூய்மைப் பணியாளா்களுக்கும், காங்கயம் நகராட்சியில் 164 தூய்மைப் பணியாளா்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
வெள்ளக்கோவில் நகராட்சியில் 168 தூய்மைப் பணியாளா்களுக்கும், திருமுருகன்பூண்டி நகராட்சியில் 159 தூய்மைப் பணியாளா்களுக்கும், அவிநாசி நகராட்சியில் 153 தூய்மைப் பணியாளா்களுக்கும் உணவு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, பேரூராட்சிகளில் பணியாற்றும் 496 தூய்மைப் பணியாளா்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு நாள்தோறும் காலை 8-9 மணிக்குள் வெவ்வேறு வகைகளில் காலை உணவு இலவசமாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இந்நிகழ்ச்சிகளில், மாநகராட்சி துணை ஆணையா்கள் மகேஸ்வரி, சுந்தரராஜன், மாநகர நல அலுவலா் முருகானந்த் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.,