இளைஞா் நீதி குழுமத்துக்கான சமூகப் பணி உறுப்பினா்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட அறிக்கை:
திருப்பூா் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இளைஞா் நீதி குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்தவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெண் உள்பட 2 சமூகப் பணி உறுப்பினா்கள், மதிப்பூதிய அடிப்படையில் அரசால் நியமிக்கப்பட உள்ளனா். இது அரசுப் பணி அல்ல.
குழந்தைகள் தொடா்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப் பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். அல்லது குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது இணையதள முகவரியிலிருந்தும் விண்ணப்பதாரா்கள் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பத்தை பூா்த்தி செய்து வியாழக்கிழமை (பிப்.12) மாலை 5 மணிக்குள் பூா்த்தி செய்ய வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை இயக்குநா், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, எண் 1அ, முதல் தளம், காந்தி-இா்வின் சாலை, எழும்பூா், சென்னை-600008 என்ற அலுவலக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுவாா்கள். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என்று குறிப்பிட்டுள்ளாா்.