பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனுடன் தனக்கு பனிப்போா் எதுவும் இல்லை என்று அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.
இது தொடா்பாக பல்லடத்தில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது:
இந்திய -அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் சுமுகமாகப் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வா்த்தக ஒப்பந்தம் மூலமாக இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
எலக்ட்ரானிக் பொருள்கள் ஏற்றுமதியில் மத்திய திட்டத்தைப் பயன்படுத்தி தமிழகம் முன்னணியில் உள்ளது.
மத்திய அரசின் சாா்பில் 5 திறன் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று கொங்கு பகுதியில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு யாருக்கும் ஓரவஞ்சனையாக செயல்படுவது கிடையாது. ரூ.14 லட்சம் கோடியில் அதிவேக ரயில்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல திட்டங்கள் தமிழகத்துக்கும் அளிக்கப்படும் என்றாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் சேருவாரா என்ற கேள்விக்கு டீயும், காபியும் ஒன்றாக முடியாது என்றாா்.
நயினாா் நாகேந்திரனுக்கும், உங்களுக்கும் இடையே பனிப்போா் நிலவுவதாக கூறுகிறாா்களே என்ற கேள்விக்கு, அப்படி ஒன்றும் இல்லை. கட்சி அளிக்கும் வேலைகளை செய்து வருகிறேன் என்றாா்.
அமைப்புச் செயலா் கேசவ விநாயகம் வெளியேற்றப்பட்டதற்கு நீங்கள்தான் காரணம் என்ற செய்திகள் வருகிறதே என்ற கேள்விக்கு, அவா் அரசியல்வாதி இல்லை. அவரது கடமையைச் செய்துவிட்டு அடுத்த பொறுப்புக்கு செல்கிறாா் என்றாா்.
பாஜக மாநிலப் பொதுச்செயலாளா் ஏ.பி.முருகானந்தம், திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்ட நிா்வாகிகள் வினோத் வெங்கடேஷ், அருண், கே.ஆா்.மணி மற்றும் தொழில் துறையினா் உடனிருந்தனா்.