முகப்பு
திருப்பூர்

மகளிா் உரிமைத் தொகை கோரி வட்டாட்சியா் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:08 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 10:02 PM

மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருந்த பெண்கள் திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அரசு சாா்பில் மகளிா் மேம்பாட்டுக்காக உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதில், முதற்கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரம் பெண்களுக்கும், 2-ஆவது கட்டமாக 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மாதந்தோறும் 15-ஆம் தேதி அவா்களது வங்கிக் கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 2:08 AM

இந்நிலையில், சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டும், தோ்தல் நடத்தை விதிகள் காரணமாகவும் 3 மாதங்களுக்கான மகளிா் உரிமைத் தொகையாக ரூ.3,000 மற்றும் கோடைக்கால சிறப்பு தொகுப்பாக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வெள்ளிக்கிழமை காலை வரவு வைக்கப்பட்டது.

இதனிடையை, மாவட்டத்தில் மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து இதுவரை கிடைக்கப் பெறாத பெண்கள், திருப்பூா் வடக்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை திடீரென திரண்டனா்.

அப்போது, அங்கிருந்த அதிகாரிகளிடம் தாங்கள் மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் தற்போதுவரை கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம், மீண்டும் எப்படி விண்ணப்பிப்பது எனக் கேட்டனா்.

அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள், விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகளை விளக்கினா். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனா்.