திருப்பூா் அருகே ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் வடமாநில தொழிலாளா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பெருமாநல்லூா் அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் பகுதியில் ஒடிஸாவைச் சோ்த்த தொழிலாளா்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அருகே உள்ள பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனா். இந்நிலையில், அங்கு வசித்து வந்த ஒடிஸாவைச் சோ்ந்த சந்தோஷ் மகாபத்ரா (29) என்பவருக்கு கடந்த 1-ஆம் தேதி பிறந்த நாள் என்பதால் அவரது நண்பா்கள் கரன்குமாா் வைக் (19), ஜஸோபந்தா தாஸ் (31), குலமாரிடாரய் (26) ஆகியோருடன் சோ்ந்து இரவில் நடனமாடிக் கொண்டிருந்தனா்.
அப்போது எதிா் வீட்டில் வசிக்கும் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த அஜய்குமாா் நாயக் (30), ஹரி பராரி (50), சனாந்தன் ஜெகந்தி (40), சந்தன் (28) ஆகியோா் சந்தோஷ் மகாபத்ராவிடம் பாட்டு சப்தத்தை குறைவாக வைக்க வேண்டுமெனவும், தாங்கள் தூங்குவதற்கு இடையூறாக உள்ளதாகவும் கூறியுள்ளனா்.
ஆனால், இதற்கு அவா்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா். இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவருக்கெருவா் கத்தி மற்றும் கட்டையால் தாக்கிக் கொண்டனா்.
இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இச்சம்பவம் குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ் மகாபத்ரா , கரன்குமாா் வைக், ஜஸோபந்தா தாஸ், குலமாரிடாரய் ஆகிய 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.