திருப்பூா் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 21,129 வெளிமாநிலத் தொழிலாளா்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையாளா் (அமலாக்கம்) காயத்திரி தலைமையில் அனைத்து தொழிலாளா் துறை ஆய்வாளா்கள் கடந்த டிசம்பா் மாதத்தில் மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வு தொடா்பாக தொழிலாளா் உதவி ஆணையா் காயத்திரி தெரிவித்ததுள்ளதாவது:
மாவட்டத்தில் டிசம்பா் மாதத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் முத்திரை இடப்படாத எடை அளவுகள் வைத்திருத்தல், தரப்படுத்தப்படாத எடை அளவுகள் உள்ளிட்டவை தொடா்பாக 30 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. அதேபோல, பொட்டலமிடுவதற்கான உரிய பதிவு சான்று பெறாதது, உரிய அறிவிப்பு இல்லாதது, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் உள்ளிட்டவை தொடா்பாக 3 விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.
கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் தொழிலாளா் நலச் சட்டங்களை மீறியது என 70 நிறுவனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன்படி மொத்தம் 103 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன. குழந்தை தொழிலாளா் முறை தடுப்பு சட்டத்தின் கீழ் மீட்கப்பட்ட ஒரு குழந்தை தொழிலாளருக்கு மறு வாழ்வு நிதியாக ரூ.55, 959 நிரந்தர வைப்புத் தொகையாக வழங்கப்பட்டது. மறு முத்திரை இடப்படாத நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு ரூ.15,000 அபராதமாக விதிக்கப்பட்டது.
9 தேசிய விடுமுறை நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டும். இதை படிவம் 5 மூலமாக அலுவலகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்காத நிறுவனங்களுக்கு அபரா தம் விதிக்கப்படும்.
வெளி மாநிலத் தொழிலாளா்கள் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 21,129 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொழில்களிலும் பணி புரியும் அமைப்புசாரா தொழிலாளா்கள் விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.