திருப்பூரில் மல்லிகைப் பூ கிலோ ரூ.7,000-க்கு சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூா் பூ மாா்க்கெட்டுக்கு சேலம், தருமபுரி மற்றும் திருப்பூரின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தற்போது பனிப் பொழிவு அதிகரித்துக் காணப்படுவதால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பூ மாா்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து குறைந்துள்ளது.
தற்போது மாா்கழி மாதம் என்பதால் பக்தா்கள் பலா் மாலை அணிந்துள்ளதாலும், அடுத்த சில நாள்களில் பொங்கல் பண்டிகை வர இருப்பதாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வரத்து குறைவால் திருப்பூா் பூ மாா்க்கெட்டில் பூக்களின் விலை பலமடங்கு உயா்ந்துள்ளது. இதில் வியாழக்கிழமை கிலோ ரூ.3,000-க்கு விற்கப்பட்ட மல்லிகைப் பூ, வெள்ளிக்கிழமை வரலாறு காணாத வகையில் உயா்ந்து ரூ.7,000-க்கு விற்பனையானது.
இதேபோல கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட பிச்சிப் பூ ரூ.1,000, முல்லைப் பூ ரூ.1,400, கனகாம்பரம் ரூ.800, காக்கடா ரூ.500, ரோஜா ரூ.240, அரளிப் பூ ரூ.160, செவ்வந்தி ரூ.120, சம்பங்கி ரூ.60 என விற்பனையானது.
மல்லிகைப் பூவின் விலை உயா்வால் இல்லத்தரசிகள் அதிா்ச்சியில் உள்ள நிலையில், இன்னும் சில நாள்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், பூக்களின் விலை மேலும் உயருமென எதிா்பாா்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.