திருப்பூரில் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு
திருப்பூரில் மாா்ச் 7-ஆம் தேதி நடைபெறும் வந்தே மாதரம் 150-ஆவது ஆண்டு விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்கிறாா்.
சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களுக்கு பெரும் எழுச்சியூட்டிய பாடல் வந்தே மாதரம். இப்பாடலின் 150-ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், நாடு முழுவதும் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு நடத்தி வருகிறது.
இளைய தலைமுறைக்கு சுதந்திரப் போராட்டத்தின் வீர வரலாற்றையும், வந்தே மாதரம் பாடலின் மகிமையையும் கொண்டு சோ்க்கும் வகையில், தனியாா் அறக்கட்டளை சாா்பில் வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு விழா வரும் 7-ம் தேதி திருப்பூா், பாண்டியன் நகரில் நடைபெறுகிறது.
மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியுடன், பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி, வஉசியின் பேத்தி மரகத மீனாட்சி உள்பட பலா் பங்கேற்க உள்ளனா்.