வந்தே மாதரம் பாட மறுத்த முஸ்லிம் கவுன்சிலர்கள்! இந்தூரில் சர்ச்சை!
மத்திய பிரதேசத்தில் மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸின் இரண்டு முஸ்லிம் கவுன்சிலர்கள் வந்தே மாதரம் பாட மறுத்ததால் சர்ச்சை
மத்திய பிரதேசத்தில் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் காங்கிரஸை சேர்ந்த இரண்டு முஸ்லிம் கவுன்சிலர்கள் வந்தே மாதரம் பாட மறுத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் இந்தூர் மாநகராட்சியில் புதன்கிழமையில் வழக்கமான பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின்போது, காங்கிரஸை சேர்ந்த முஸ்லிம் கவுன்சிலர்களான ஃபௌசியா ஷேக் அலீம் மற்றும் ரூபினா இக்பால் ஆகிய இருவரும், வந்தே மாதரம் பாடலை பாட மறுத்துவிட்டனர்.
இருவரும் வந்தே மாதரம் பாட மறுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதால், அவையில் அமளி ஏற்பட்டது. இருப்பினும், மாநகராட்சிக்குள் வந்தே மாதரம் பாடுவதைக் கட்டாயமாக்கும் குறிப்பிட்ட சட்டத்தையோ விதியையோ காட்ட வேண்டும் என்று இருவரும் வலியுறுத்தினர்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, வந்தே மாதரம் மீதான மறுப்பு, தேசிய உணர்வின் மீதான அவமதிப்பு என்று பாஜகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பதற்றத்தைக் குறைக்கும் வகையில், முஸ்லிம் கவுன்சிலர்கள் இருவரையும் வெளியேறுமாறு தலைவர் முன்னாலால் யாதவ் உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அவைக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய கவுன்சிலர் ரூபினா இக்பால், "நாங்கள் யாருடைய மிரட்டலுக்கும் அடிபணிய மாட்டோம்.
எங்கள் இஸ்லாமிய நம்பிக்கையின்படி வந்தே மாதரம் பாடலைப் பாட இயலாது. எங்கள் குர் ஆன் அறிவுறுத்துகிறபடி வந்தே மாதரம் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும்.
ஏனெனில், எங்களைப் பொருத்தவரையில், அல்லா ஒருவனே உன்னதமானவன்; வணங்கக் கூடியவன். வந்தே என்றால் வணங்குதல் என்றும், மாதரம் என்றால் தாயைக் குறிக்கிறது. ஆனால், நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்குகிறோம். வேறு யாரை நாங்கள் வணங்க வேண்டும்?
இது எனது மூன்றாவது பதவிக்காலம். ஆனால், முதல்முறையாக முற்றிலும் மௌனமாக இருக்கும் ஒரு தலைவரை (முன்னாலால் யாதவ்) நான் பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சி நரகத்துக்குப் போகட்டும். அவர்கள் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே கருதுகின்றனர்.
காங்கிரஸ், எங்களைக் கட்சியிலிருந்து நீக்கினால், நாங்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாங்கள் ஒவைசியின் கட்சியில்கூட சேரலாம்.
இங்கு முஸ்லிம்களைக் கடைகள் அமைக்க பாஜக உறுப்பினர்கள் அனுமதிப்பதில்லை. அப்படியென்றால், அவர்கள் ஈரானிலிருந்து எண்ணெய், எரிவாயு இறக்குமதி செய்வதையும் நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக சொந்த கட்சி கவுன்சிலர்களுக்கே எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கே.கே. மிஸ்ராவும், "இது பாஜகவுடன் சேர்ந்து கூட்டுச் சதியில் திட்டமிட்டு, அரங்கேற்றப்பட்ட செயல்பாடுதான். தங்களின் தேசிய கடமையை நிறைவேற்ற முடியாதவர்களும், வந்தே மாதரம் பாட முடியாதவர்களும் நரகத்துக்குச் செல்லட்டும். அவர்கள் பாகிஸ்தானில் சென்று குடியேறட்டும். இவர்களை வெறும் எச்சரிப்பதோடு மட்டுமின்றி, கட்சியிலிருந்து நீக்க வேண்டும்" என்று கூறினார்.
Vande Mataram row rocks Madhya Pradesh's IMC; Congress distances from issue
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.