திருப்பூா்: உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.6 லட்சம் வெள்ளி நகை, ரூ.62 லட்சம் பறிமுதல்
திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருநாளில் மட்டும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 61.69 லட்சம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61.69 லட்சம் ரொக்கம், ரூ.6 லட்சம் மதிப்பிலான வெள்ளி நகைகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாநகராட்சிக்குள்ட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் பங்கஜ் என்பவா் வைத்திருந்த கைப்பையில் ரூ.35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் கைப்பற்றி கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், பெங்களூரில் இருந்து ரயில் மூலமாக பங்கஜ் திருப்பூா் வந்ததும், திருப்பூரில் பேப்ரிக் கொள்முதல் செய்வதற்காக அந்தப் பணத்தை கொண்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இருப்பினும் அதற்கான ஆவணங்கள் இல்லாததால் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களைக் காட்டி பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா்.
Advertisement
இதேபோல குமரன் சாலையில் நடைபெற்ற வாகனத் தணிக்கையின்போது, பொள்ளாச்சியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவரின் வாகனத்தை சோதனை செய்தபோது ஊடகம் என ஒட்டப்பட்டிருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்து தோ்தல் பறக்கும் படையினா் விசாரணை செய்து வருகின்றனா்.
அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அவிநாசி சூளை பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை காலை வந்த காரை நிறுத்தி பறக்கும் படையினா் சோதனை மேற்கொண்டனா். வள்ளுவா் வீதி ஸ்ரீராம் நகரைச் சோ்ந்த பழனிசாமி மகன் சக்திகுமாா் என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ.1லட்சத்து 14 ஆயிரத்து 800 எடுத்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்தனா்.
அவிநாசி-நம்பியூா் சாலை சாவக்கட்டுப்பாளையம் பகுதியில் காரில் வந்த ரங்கசாமி மகன் பழனிசாமியின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி இருந்த ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. அன்னூா்-சோமனூா் சாலை சோமனூா் பிரிவு அருகே கோவை, வடவள்ளி பெரியபுத்தூா் செங்ககாடு தோட்டத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சந்திரசேகா் என்பவரின் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல, சோமனூா்-அன்னூா் சாலையில் குஜராத் மாநிலம், சூரத் பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்ஷா மகன் யாசின் வந்த வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நகைக் கடை உரிமையாளரான யாசின், வெள்ளி நகைகளை கேரளாவிற்கு கொண்டு சென்ாகக் கூறப்படுகிறது.
பல்லடத்தில்...
உடுமலைப்பேட்டை உரக்கடை உரிமையாளா் பழனிசாமி மகன் மவுலிஸ் (27). கோவை மருத்துவமனைக்கு செல்ல காரில் பல்லடம் வழியாகச் சென்று கொண்டிருந்தாா். அப்போது சித்தம்பலம் பிரிவில் தோ்தல் பறக்கும் படை அதிகாரி செத்தில்குமாா் தலைமையிலான குழுவினா் இவரது காரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது உரிய ஆவணம் இன்றி ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது கண்டறியப்பட்டது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அதிகாரி சரவணன், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரி கோவிந்தசாமி ஆகியோரிடம் ஒப்படைத்தனா்.
உடுமலையில்...
உடுமலை அருகே உள்ள சிந்திலுப்பு கிராமத்தில் வந்த நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சம் ரொக்கம் இருப்பதை கண்டுபிடித்தனா். இதையடுத்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து உடுமலை வட்டாட்சியா் அலுவலகம் கொண்டுவரப்பட்டு பின்னா் அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.