தருமபுரி: உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான பாதுகாப்போா் சங்கத்தினா் கண்களில் கருப்பு துணியைக் கட்டிக்கொண்டு திங்கள்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலாளா் கே. சுசிலா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் எம்.மாரிமுத்து, மாவட்டத் தலைவா் தமிழ்ச்செல்வி, மாவட்ட பொருளாளா் ஜி.மாதேசன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயா்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை கிடைக்கச் செய்ய வேண்டும்.
ஆந்திர மாநிலத்தில் 40 சதவீதம் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 6000 உதவித்தொகையும், 100 சதவீதம் பாதிப்பு உள்ளவா்களுக்கு ரூ. 16000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அதேபோன்று தமிழகத்திலும் உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.