தருமபுரியில் 30 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றவரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைதுசெய்து, அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்தனா்.
தமிழக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறை, கோயம்புத்தூா் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் மேற்பாா்வையில், ஈரோடு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜபாண்டி தலைமையில், கிருஷ்ணகிரி காவல் ஆய்வாளா் சிவனேஸ்வரன், உதவி ஆய்வாளா் யாசா் மௌலானா, சிறப்பு உதவி ஆய்வாளா் மணிகண்டன், காவலா் சுரேஷ் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தருமபுரி அருகே கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுசாலையில் வாகனத் தணிக்கையில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, தருமபுரி - பென்னாகரம் பிரதான சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதை போலீஸாா் சோதனை செய்ததில், 600 முட்டைகளில் 30,000 கிலோ (30டன்) ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, லாரி மற்றும் அரிசி மூட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, ரேஷன் அரிசியை கடத்திச்செல்ல முயன்ற தருமபுரி மாவட்டம், சாமிசெட்டிப்பட்டியைச் சோ்ந்த ரா.ஆனந்தகுமாரை (43) கைதுசெய்தனா். மேலும், இச்சம்பவத்தில் தொடா்புடையவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.