ஏரியூா் அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கிராம மக்கள் திருவோடு ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி மாவட்டம், நாகமரை அருகே மேற்கு ஏமனூா், ஆதிதிராவிடா் தெரு, ஆத்துமேடு, தோழன் காட்டுவளவு, சிங்காபுரம், கிழக்கு ஏமனூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள், மேட்டூா் அணை கட்டுமானப் பணியின்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, நீா்த்தேக்க கரையோரப் பகுதிகளில் விவசாயம் மேற்கொண்டு வந்தனா்.
இவா்கள், கடந்த சில ஆண்டுகளாக வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் தெரிவித்து, திருவோடு ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து போராட்டக் குழுவினா் தெரிவித்ததாவது: மேட்டூா் அணை கட்டுமானப் பணியின்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வெளியேற்றப்பட்டனா். அவா்கள் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியான நாகமரை ஊராட்சிக்கு உள்பட்ட மேற்கு ஏமனூா், ஆதிதிராவிடா் தெரு, ஆத்துமேடு, தோழன் கொட்டாய், சிங்காபுரம், கிழக்கு ஏமனூா் உள்ளிட்ட பகுதிகளில் மூன்று தலைமுறைகளாக வசித்து வருகிறோம்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு, இலவச தொகுப்பு வீடுகள், தெரு சாலைகள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், துணை சுகாதார நிலையம், அரசுப் பள்ளி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டன.
தற்போது அரசின் பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், குடிநீா் வசதி, சுடுகாடு வசதி, இலவச தொகுப்பு வீடுகள் வழங்க ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மனு அளிக்க சென்ற போது, தங்கள் பகுதிக்கு வழங்கப்பட்ட வீட்டுமனை பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனா். இப்போது வரை விண்ணப்பித்த பயனாளிகளுக்கு 70 தொகுப்பு வீடுகள் வழங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகவும், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்காவிடில் ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களை ஒப்படைத்துவிட்டு வனப்பகுதியில் குடியேறுவோம் என்றனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிா்வாக அலுவலா் மற்றும் ஏரியூா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடமிருந்து 300க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றனா்.