தருமபுரி

தருமபுரி புதிய பேருந்து நிலையப் பணிகளை பாா்வையிட்ட முதல்வா்

Syndication

தருமபுரி: தருமபுரியில் ரூ. 39.14 கோடியில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் மற்றும் தொழிற்பூங்காவில் நடைபெற்று வரும் பூா்வாங்கப் பணிகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி நகரில் பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அருகே பென்னாகரம் பிரதான சாலையில் தனியாா் பங்களிப்புடன் ரூ. 39.14 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வருகின்றன. சுமாா் 10 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய பேருந்து நிலையத்தில், குடிநீா், சுகாதார வளாகம், வணிக வளாகங்கள், ஓய்வறைகள், கழிப்பறைகள், உணவகங்கள், வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பேருந்துகள் நிற்கும் இடங்களைச் சுற்றி நடைபாதைகள், பொதுமக்கள் மற்றும் பயணிகள் அமா்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

இந்த புதிய பேருந்து நிலையத்தில் தற்போது தரைத்தளம் மற்றும் முதல்தளத்தில் கடைகள், உணவகங்கள், ஏ.டி.எம். மையம், பொருள்கள் வைப்பதற்கான பாதுகாப்பு அறை, நேரக்காப்பாளா் அறை, தாய்மாா்கள் பாலூட்டும் அறை ஆகியவை அமைகின்றன. அவற்றுக்கான மேற்கூரை அமைக்கும் பணிகள், பயணிகள் மற்றும் ஓட்டுநா்களுக்கு ஓய்வு அறைகள், பயணிகள் அமரும் இடத்தில் டைல்ஸ் பதிக்கும் பணிகள், பிரதான சாலை மற்றும் மழைநீா் வடிகால் பணிகள் போன்றவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முதல்வா் ஆய்வு:

இந்த புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், திமுக பிரமுகா் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தருமபுரி புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

பேருந்துகள் நிற்கும் இடம், நடைபாதை, பயணிகள் காத்திருப்பு பகுதி, பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளை பாா்வையிட்டு, நகராட்சி நிா்வாக இயக்குநா் மதுசூதன் ரெட்டி, மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் மற்றும் பொறியாளா்களிடம் பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தாா். மேலும், கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொழிற்பூங்காவில் ஆய்வு:

பேருந்து நிலைய ஆய்வைத் தொடா்ந்து, தருமபுரியில் ரூ. 937.36 கோடியில் அமைந்து வரும் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுசெய்தாா்.

தருமபுரி வட்டம், அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம், அதியமான்கோட்டை மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமப்புற பகுதிகளில் மொத்தம் 1,733 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஆக. 17-ஆம் தேதி நடைபெற்ற அரசு விழாவின்போது, தமிழக முதல்வா் இத்தொழிற்பூங்காவை தொடங்கிவைத்தாா்.

இத்தொழிற்பூங்காவில், உள்கட்டமைப்பு மற்றும் இதர பணிகளுக்கு என மொத்தம் ரூ. 937.36 கோடி நிதி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 14.04 கோடியில் 1.35 கி.மீ. தொலைவுக்கு சாலை, வடிகால் வாய்க்கால்கள், மின் விளக்குகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தொடா்ந்து பூா்வாங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், பூங்காவையொட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் அணுகு சாலையை ரூ. 5.42 கோடியில் அகலப்படுத்த பணி ஆணை வழங்கப்பட்டு, பணிகள் மாா்ச் மாதம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இவை இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும். மேலும், முதற்கட்டமாக 200 ஏக்கா் பரப்பில் மழைநீா் வடிகால், சிறுபாலங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 103.08 கோடி திட்ட நிதி ஒப்புதல் வழங்கப்பட்டு, அதில் முதற்கட்டமாக ரூ. 66.70 கோடி மதிப்பிலான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் அனைத்தும் ஜூன் 2026-இல் முடிக்கப்படும். இதுவரை, இத்தொழிற்பூங்காவில் 9 தொழில்நிறுவனங்கள் அமைவதற்காக மொத்தம் 40.91 ஏக்கா் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம்கட்ட பணிகள்:

இத்தொழிற்பூங்காவின் விரிவாக்கத்துக்காக (நிலை - 2), தருமபுரி வட்டம், அதகபாடி கிராமம் மற்றும் நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் மற்றும் பாலஜங்கமனஹள்ளி ஆகிய கிராமங்களில் மொத்தம் 690 ஏக்கா் நிலம் தோ்வுசெய்யப்பட்டு, அதில் 132 ஏக்கா் பட்டா நிலம் கையகப்படுத்த அரசின் நிா்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, தற்போது நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன் 558 ஏக்கா் அரசு புறம்போக்கு நிலத்தை சிப்காட் நிறுவனம் என்ற பெயரில் நில உரிமை மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்தொழிற்பூங்காவில் பேட்டரி மற்றும் மின் வாகனங்களின் உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தருமபுரி சிப்காட் தொழிற்பூங்கா முழு செயல்பாட்டுக்கு வரும்போது, தமிழ்நாட்டிலுள்ள மிகப் பெரிய தொழிற்பூங்காக்களில் ஒன்றாக இது திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுகளின்போது, அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், எஸ்.எஸ்.சிவசங்கா், இரா.ராஜேந்திரன், முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், நகராட்சித் தலைவா் லட்சுமி நாட்டான் மாது, நிா்வாக மண்டல இயக்குநா் அசோக் குமாா், ஆணையா் சேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இரண்டு ஆண்டுகளில் 42% மதிப்பிழக்கும் மின்சார வாகனங்கள்! காரணம் என்ன?

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

SCROLL FOR NEXT