நெடுஞ்சாலைத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தருமபுரியில் நெடுஞ்சாலைத் துறை ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநிலச் செயலாளா் மா.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
இதில், நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அனைத்து காலிப் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். பராமரிப்பு பணிகளை தனியாருக்கு கொடுக்கும் நடவடிக்கையை கைவிட்டு அரசாங்கமே நடத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பத்துள்ள நிலையில், அவா்களின் குடும்ப நலன் மற்றும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு உடனடியாக பணிநியமனம் வழங்க வேண்டும். அலுவலக உதவியாளா் மற்றும் காவலா் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் உள்ள அலுவலகங்களில் வெளி முகமை மற்றும் ஓய்வுபெற்ற அலுவலா்களை பணியமா்த்தும் நடவடிக்கைகளை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
இதில், மாவட்டத் தலைவா் இளங்கோவன், மாவட்டப் பொருளாளா் கணேஷ் குமாா், முன்னாள் மண்டலச் செயலாளா் முனிராஜ், நிா்வாகி பாலாஜி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஏ.தெய்வானை, மாவட்ட தணிக்கையாளா் யாரப்பாஷா, வட்டச் செயலாளா் மணிரத்தினம், மாவட்ட மகளிா் துணைக்குழு உறுப்பினா்கள் பெ.மகேஸ்வரி, ஜான்சி, ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி, முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சி.காவேரி, அரசு ஆகியோா் பேசினா்.