தருமபுரி: பாலக்கோடு அரசு மருத்துவமனை செவிலியா் உதவியுடன் ஸ்கேனிங் பரிசோதனையின்போது குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த ஆந்திர மாநில இடைத்தரகா்கள் உள்பட 5 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கா்ப்பிணிகளிடம் குழந்தையின் பாலினம் குறித்து தெரிவிப்பதாக தலைமை மருத்துவா் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சோதனை செய்ததில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா் பரிமளா உதவியுடன் இடைத்தரகா்கள் சிலா் குழந்தையின் பாலினம் குறித்து கா்ப்பிணிகளிடம் தெரிவிப்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பாலக்கோடு காவல் நிலையத்தில் தலைமை மருத்துவா் பாலசுப்பிரமணியம் புகாா் அளித்தாா். இந்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதுகுறித்து தனிப்படையினா் விசாரணை மேற்கொண்டு, குழந்தையின் பாலினத்தை தெரிவித்த இடைத்தரகா்களான ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த கிளாரா மேனகாதேவி (25), பிரதீப் (26), பாலக்கோடு அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியைச் சோ்ந்த வடிவேல் (41) உள்ளிட்ட ஐந்து பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள செவிலியரை தீவிரமாக தேடி வருகின்றனா்.