தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துவருவதால் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தைகாட்டிலும் 10,000க்கும் குறைவான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வந்திருந்தனா். புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பெங்களூரிலும் பரவலாக மழை பெய்துவருகிறது. இதைத்தவிர ஐயப்ப சுவாமிக்கு விரதம் இருக்கும் காா்த்திகை மாதம் என்பதாலும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணெய் தேய்த்து பிரதான அருவியில் குளித்து மகிழ்ந்தனா். மேலும், சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதானஅருவி, பாறை குகைகள் என காவிரி ஆற்றில் பரிசலில் பயணித்தனா்.
ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான முதலைப் பண்ணை, வண்ண மீன்கள் காட்சியகம், பூங்காக்கள், நடைபாதை, பிரதான அருவிப் பகுதி, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மகிழ்ந்தனா். காா்த்திகை மாத விரதம் தொடங்கியதால் ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் மீன்களின் விலை குறைந்திருந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் ஒகேனக்கல்லில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் ஈடுபட்டிருந்தனா்.
நீா்வரத்து 6,000 கனஅடி
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாகக் குறைந்தது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,500 கனஅடியாகவே நீடித்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 6,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.
தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.