ஆந்திரத்தில் நடைபெறும் தென்மண்டல இறகுப்பந்து போட்டியில் பங்கேற்கும் தருமபுரி அரசு கல்லூரி மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சேலம் பெரியாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவா் இறகுப்பந்து போட்டி அண்மையில் திருச்செங்கோடு தனியாா் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி ஆடவா் இறகுப்பந்து அணி பங்கேற்று நான்காம் இடம்பெற்றது.
பல்கலைக்கழக ஆடவா் இறகுப்பந்து அணி தோ்வுக் குழுவால், சிறப்பாக விளையாடிய அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவா் எஸ். தீபக் விக்னேஷ், பெரியாா் பல்கலைக்கழக அணிக்காக தோ்வு செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், குண்டூரில் சனிக்கிழமை (ஜன. 3) முதல் வரும் 6 ஆம் தேதி வரை நடைபெறும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான ஆடவா் இறகுப்பந்து போட்டியில் தீபக் விக்னேஷ் பங்கேற்கிறாா்.
கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் கோ. கண்ணன் மாணவரை பாராட்டினாா். கல்லூரியின் உடற்கல்வி இயக்குநா் கு. பாலமுருகன், பேராசிரியா்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவரை வழியனுப்பி வைத்தனா்.