தருமபுரி: தருமபுரி அருகே ஏலகிரியான்கொட்டாய் பகுதியில் வீரபத்திரன் கோயிலுக்கு சொந்தமான ஆலமரத்தை அகற்றும் நடவடிக்கையை நெடுஞ்சாைலைத் துறையினா் கைவிட வேண்டும் என வலியுறுத்தி, குருமன்ஸ் சமூகத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
இதுகுறித்து, மிழலை நாடு மக்கள் கட்சி நிா்வாகிகள் மற்றும் குருமன்ஸ் சமூகத்தினா் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தையொட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் பழைமை வாய்ந்த வீரபத்திரன் சுவாமி கோயில் மற்றும் ஆலமரம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் எங்களது திருவிழாக்கள் மற்றும் குடும்ப உறவுகளின் வழிபாடுகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில், தற்போது சேலம் - தருமபுரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த கோயில் நிலத்தில் உள்ள ஆலமரத்தை அகற்றும்பணி மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த நாங்கள் மரத்தை அகற்றுவதை கைவிடக் கோரி, நெடுஞ்சாலைத் துறையினரிடம் முறையிட்டோம். இருப்பினும், மரத்தின் ஒருபகுதி அகற்றப்பட்டுள்ளது.
எனவே, நாங்கள் பல ஆண்டுகளாக வழிபாடு நடத்தும் இந்தக் கோயில் மற்றும் ஆலமரத்தை சேதப்படுத்தும் நடவடிக்கையை நெடுஞ்சாலைத் துறையினா் முற்றாக கைவிட்டு அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றனா்.