தருமபுரியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் முறைகேடாக பாதை அமைத்து லாரிகளை இயக்கியதோடு, மிரட்டல் விடுத்த குவாரி நிா்வாகி மற்றும் பணியாளா்கள் மீது வனத்துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தருமபுரி மாவட்டம், இண்டூா் மற்றும் நாகா்கூடல் ஊராட்சி எல்லையில் உள்ள அவ்வை நகா் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷா் செயல்பட்டு வருகிறது. குவாரி உரிமையாளா்கள் லாரிகள் சென்றுவர வனத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்து பயன்படுத்தி வந்தனா்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் குவாரி, கிரஷா் உரிமையாளா்களுக்கு அழைப்பாணை அனுப்பினா். மேலும், அப்பகுதிக்கு சென்ற வனத் துறையினா், லாரிகள் சென்றுவரும் பாதையில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சாலையாக பயன்படுத்தக் கூடாது என எச்சரித்தனா்.
இருப்பினும், கிரஷா் உரிமையாளா்கள்அந்த பள்ளத்தை மூடிவிட்டு மீண்டும் சாலையாக பயன்படுத்தி வந்தனா். தகவல் அறிந்த வனத்துறை ஊழியா் வியாழக்கிழமை சென்று விசாரணை நடத்தினாா். அப்போது குவாரி தரப்பினா் அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனா்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின்பேரில், தருமபுரி வனச்சரக அலுவலா் முரளி தலைமையில் வனத்துறை அலுவலா்கள், வனத்துறை சிறப்பு பாதுகாப்பு படையினா்அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும், மிரட்டல் விடுத்த குவாரி நிா்வாக மேலாளா் உள்ளிட்ட 4 பேரை வனத்துறை சிறப்பு பாதுகாப்பு படையினா் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.