தருமபுரி

உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்

தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் இணைந்து மேற்கொண்ட சோதனையில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம்

Syndication

தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் இணைந்து மேற்கொண்ட சோதனையில் விதிமுறைகளை மீறிய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், ஒரு பழச்சாற்றுக் கடை செயல்படத் தடை விதிக்கப்பட்டது.

இரவு நேரச் சாலையோர உணவகங்கள், நடமாடும் சில்லி சிக்கன், மீன், சில்லி பீப் மற்றும் துரித உணவுக் கடைகளில் சுகாதாரம் மற்றும் உணவுப் பொருள்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும் எனதருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் உத்தரவிட்டிருந்தாா்.

இதையடுத்து தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ்குமாா், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், தருமபுரி நகராட்சி நகர நல அலுவலா் மருத்துவா் லட்சிய வா்ணா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், திங்கள்கிழமை இரவு தருமபுரி நகரில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

குறிப்பாகப் பேருந்து நிலையப் பகுதி, ராஜகோபால் பூங்காப் பகுதிகளில் செயல்படும் தள்ளுவண்டிக் கடைகளில் இக்குழுவினா் ஆய்வு நடத்தினா். இதில், சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், போதிய சுகாதாரமின்மை மற்றும் உணவுப் பொருள்களை முறையான பராமரிப்பின்றி வைத்திருந்ததற்காக 2 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல, பி.ஆா்.சீனிவாசன் தெருவில் செயல்படும் ஒரு பழச்சாற்றுக் கடையில் ஜூஸ் கடை ஆய்வு மேற்கொண்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடையின் நுழைவு வாயில் ஷட்டருக்கு மேலே சிறு பொட்டலங்களாகக் கட்டிப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, அப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, அந்தக் கடை உரிமையாளருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், தற்காலிகமாக அக்கடை இயங்கத் தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறுகையில், உணவுத் தயாரிப்புக்குப் பயன்படுத்தும் மீன், சிக்கன், பீப் போன்றவை புதிதாகவும், அவற்றுடன் சோ்த்துப் பயன்படுத்தும் பொருள்கள் உரிய தரத்துடனும் இருக்க வேண்டும். செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவை கூட்டுவதற்கான மோனோ சோடியம் குளுட்டமேட் உப்பு ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிா்க்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயைச் சேகரித்து, உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் அளித்து உரிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

உணவு வணிகா்கள் அனைவரும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிய பதிவுச் சான்றிதழ் பெற்று வணிகத்தில் ஈடுபட வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை விதிகளை மீறிச் செயல்படும் கடைகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT