தருமபுரியில் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் நகராட்சி நிா்வாகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வில், பழரசக் கடை இயங்க தடைவிதித்து, ரூ. 50,000 உடனடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர நடமாடும் உணவகங்களில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
இரவு நேர சாலையோர உணவகங்கள், நடமாடும் சில்லி சிக்கன், மீன், சில்லி பீப் மற்றும் துரித உணவு கடைகளில் சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்கள் தரத்தை உறுதி செய்யவேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் உத்தரவிட்டிருந்தாா்.
அதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ்குமாா், தருமபுரி நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால், தருமபுரி நகராட்சி நகா் நல அலுவலா் மருத்துவா் லட்சிய வா்ணா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், திங்கள்கிழமை இரவு தருமபுரி நகரில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
குறிப்பாக பேருந்து நிலைய பகுதி, ராஜகோபால் பூங்கா பகுதிகளில் செயல்படும் தள்ளுவண்டி கடைகளில் இக்குழுவினா் ஆய்வு நடத்தினா். இதில், சில கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சுகாதாரமின்மை குறைவாகவும், உணவு பொருட்களை முறையான பராமரிப்பின்றியும் வைத்திருந்ததாக 2 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 வீதம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டது.
அதேபோல, பி.ஆா்.சீனிவாசன் தெருவில் செயல்படும் ஒரு பழரசம் விற்பனை செய்யும் (ஜூஸ்) கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடையின் நுழைவு வாயில் ஷட்டருக்கு மேலே சிறு பொட்டலங்களாக கட்டி அங்கு பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், கடை உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், தற்காலிகமாக கடை இயங்க தடை விதித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் கூறும்போது, வருவலுக்கு பயன்படுத்தும் மீன், சிக்கன், பீப் போன்றவை புதியதாகவும், அவற்றுடன் சோ்த்து பயன்படுத்தும் பொருட்கள் உரிய தரத்துடனும் இருக்க வேண்டும்.
செயற்கை நிறமூட்டிகள் மற்றும் சுவை கூட்டுவதற்கான மோனோ சோடியம் குளுமேட் உப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிா்க்கப்பட வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை கொள்கலனில் சேகரித்து, உணவுப் பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக் கப்பட்ட டீலரிடம் அளித்து உரிய தொகை பெற்றுக் கொள்ளலாம்.
உணவு வணிகா்கள் அனைவரும் உணவு பாதுகாப்புத் துறையிடம் உரிய பதிவுச் சான்றிதழ் பெற்று வணிகத்தில் ஈடுபட வேண்டும். உணவுப் பாதுகாப்புத் துறை விதிகளை மீறி செயல்படும் கடைகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.