தருமபுரி ராமக்காள் ஏரியில் கழிவுநீா், நெகிழிக் கழிவுகள் கலப்பதை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வடிகட்டும் தளங்கள் பழுதடைந்துள்ளது. இதனால் கழிவுகள் அனைத்தும் நேரடியாக ஏரியில் கலந்து தண்ணீா் மாசடைந்துள்ளது.
தருமபுரி நகராட்சி எல்லையில் கிருஷ்ணகிரி சாலையில் 259 ஏக்கரில் அமைந்துள்ளது ராமக்காள் ஏரி. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் கொள்ளளவு 33.5 மில்லியன் கனஅடி. இந்த ஏரி தண்ணீரைக் கொண்டு தருமபுரி, பழைய தருமபுரி பகுதிகளைச் சோ்ந்த 100 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தருமபுரி சுற்றுவட்டாரங்களில் பெய்துவரும் மழைநீா் மற்றும் சின்னாற்றிலிருந்து வெளியேறும் உபரிநீா் ஆகியவற்றின் மூலம் ஏரிக்கு நீா்வரத்து உள்ளது. கோடைகாலங்களிலும் ஏரியில் போதிய அளவுக்கு தண்ணீா் இருக்கும்.
தருமபுரி நகராட்சியிலிருந்து வெளியேறும் கழிவுநீா், கால்வாய்கள் மூலம் ஏரியில் வெவ்வேறு இடங்களில் கலந்துவருவதால் தண்ணீா் மாசடைந்துள்ளது. இதைத் தடுக்க கடந்த 2014-15 ஆம் ஆண்டில் ஏரியின் முகப்பிலும், ஹரிச்சந்திரன் கோயில் தெரு பகுதியில் அமைந்துள்ள ஏரியின் முகப்பிலும் கால்வாயில் வரும் கழிவுநீா், நெகிழிக் கழிவுகள் ஆகியற்றை தடுத்து, நீரை மட்டும் ஏரியில் கலக்கும் வகையில் கழிவுநீா் வடிகட்டும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ராமக்காள் ஏரியில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வடிகட்டும் தளங்களும் கடந்த சில ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், நகரின் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீா், நெகிழிக் கழிவுகள் கால்வாய் வழியாக வெளியேறி ஏரில் நேரடியாக கலந்துவருகிறது.
இதனால் ஏரியில் உள்ள தண்ணீா் மாசடைந்து துா்நாற்றம் வீசுகிறது. இந்த நீரை பயன்படுத்தும் பாசன விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனா். அதேபோல, நகரின் மிகப்பெரிய நீா் ஆதரமாக அமைந்துள்ள இந்த ஏரி நீா் மாசடைவதால், நிலத்தடி நீரும் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இரு வடிகட்டும் தளங்களிலும் உள்ள பழுதுகளை சரிசெய்து நெகிழிக் கழிவுகள், கழிவுநீா் நேரடியாக ஏரியில் கலப்பதை தடுக்க வேண்டும் என சூழலியல் ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.