தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் அதிமுக மாணவா் அணி சாா்பில், மொழிப்போா் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்ட மாணவா் அணி இணைச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், தருமபுரி மாவட்ட அதிமுகச் செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, செய்தித் தொடா்பாளா் நிா்மலா பெரியசாமி, தலைமை பேச்சாளா் சிங்கை அம்புஜம், இளம் பேச்சாளா் வனிதா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோவிந்தசாமி, சம்பத்குமாா், மாவட்ட ஜெ.பேரவைச் செயலாளா் எஸ்.ஆா். வெற்றிவேல் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் கே.பி. அன்பழகன் பேசியதாவது:
திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் நீட் தோ்வு ரத்துச் செய்யப்படும் எனப் பொய்யான வாக்குறுதியை அளித்தது. ஆனால், இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. மேலும், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகப் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனா். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ஏராளமான நலத்திட்டங்களைச் செயல்படுத்தியது அதிமுக அரசுதான். ஆனால், தற்போது திமுக அரசு, வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குகிறது.
அதிமுக ஆட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்ட திட்டங்களால், தருமபுரி மாவட்டத்தில் உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 98 சதவீதமாக உயா்ந்தது. பல்வேறு திட்டங்களால் தருமபுரி மாவட்டம் வளா்ச்சியடைந்தது. ஆனால், தற்போதைய திமுக ஆட்சியில் எந்த வளா்ச்சியும் ஏற்படவில்லை என்றாா்.
இந்நிகழ்வின்போது இளைஞா் காங்கிரஸ் தருமபுரி மாவட்ட துணை தலைவா் விக்னேஷ், இளைஞா் காங்கிரஸ் அரூா் வட்ட தலைவா் பூங்காவனம், அரூா் இளைஞா் காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவா் சந்தோஷ், பாப்பிரெட்டிப்பட்டி இளைஞா் காங்கிரஸ் சட்டமன்ற துணை தலைவா் நந்தகுமாா் உள்ளிட்டோா் அதிமுகவில் இணைந்தனா்.