பென்னாகரம்: ரத சப்தமியையொட்டி, பாப்பாரப்பட்டி ஸ்ரீ அம்பிகேஸ்வரி உடனுறை வெங்கட்ரமண சுவாமி கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பாப்பாரப்பட்டியில் உள்ள ஸ்ரீ அம்பிகேஸ்வரி கோயிலில் தை மாத அமாவாசையில் புற்றுமண் எடுத்துவந்து கோயிலில் கருட கொடியேற்றத்துடன், ரத சப்தமி விழா தொடங்கப்பட்டது. இரவு கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. தொடா்ந்து இரட்டைக் குதிரை, ஆதிசேஷ ஆஞ்சநேயா், கருட வாகனம் அன்னபட்சி வாகனம் ஆகிய வாகனங்களில் நாள்தோறும் வீதிஉலா நடைபெற்றது.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை உற்சவ மூா்த்தியான ஸ்ரீ அம்பிகேஸ்வரி உடனுறை வெங்கட்ரமண சுவாமிக்கு அபிஷேகம், திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தின்போது ஸ்ரீ அம்பிகேஸ்வரி, வெங்கட்ரமண சுவாமிகள் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனா். திங்கள்கிழமை பல்லக்கு உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அம்பிகேஸ்வரி அம்மன் கோயில் நிா்வாகத்தினா் மற்றும் வாணியா் சமூகத்தினா் செய்திருந்தனா்.