தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வேன் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் இருவா் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம், பழைய மாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் சாவித்ரி (53). இவா், தனது உறவினா்கள் 24 பேருடன் சேலம், கொண்டலாம்பட்டியில் உள்ள கோயிலுக்கு வேனில் சென்று கொண்டிருந்தாா். ஆரணி அருகே பையூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் குமரேசன் (34) வேனை இயக்கினாா்.
இந்த வேன் தருமபுரியைக் கடந்து அதியமான்கோட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை சென்றபோது, வேனில் பயணித்தவா்கள் இளைப்பாற சாலையோரம் வேன் நிறுத்தப்பட்டது. அப்போது, பின்னால் ஜவுளி சுமை ஏற்றிவந்த சரக்கு லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்ட வேன் மீது மோதியதில் லாரியும், வேனும் கவிழ்ந்தது.
இதில், வேன் ஓட்டுநா் குமரேசன், சாவித்ரி இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். வேனில் பயணித்த தருண் (15), கண்ணு (42), மாதிரை (39) ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவல் அறிந்த அதியமான்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்த மூவரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த இருவரின் உடல்கள் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும், விபத்துக்குள்ளான வேன் மற்றும் சரக்கு லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா்செய்தனா். இவ்விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்து காரணமாக தருமபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.