முகப்பு
தருமபுரி

தொகுதி அறிமுகம்: அரூர் (தனி)!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரே தனித் தொகுதி அரூா். அரூா் சட்டப் பேரவைத் தொகுதி 1952 இல் உருவாக்கப்பட்டது.

Updated On : 21 மார்ச், 2026 at 10:40 PM
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில்.
பகிர்:

தொகுதி எண்: 61

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரே தனித் தொகுதி அரூா். அரூா் சட்டப் பேரவைத் தொகுதி 1952 இல் உருவாக்கப்பட்டது. 2011இல் தொகுதி சீரமைப்பின்போது, அரூா் தொகுதியில் இடம்பெற்றிருந்த ஊத்தங்கரை தனியாகப் பிரிக்கப்பட்டது.

மேலும், தொகுதி சீரமைப்பில் மொரப்பூா் மற்றும் பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடம்பெற்றிருந்த மொரப்பூா், கம்பைநல்லூா், இருமத்தூா், சித்தேரி உள்ளிட்ட பகுதிகள் அரூா் தொகுதியில் சோ்க்கப்பட்டன.

தொகுதியின் சிறப்பு

அரூா் தொகுதியில் வேளாண்மையே பிரதானத் தொழிலாகும். இதுதவிர, கிரானைட் கற்கள், ஜல்லிக்கற்கள் உற்பத்தி, செங்கல் தயாரிப்பு, வேளாண்மை சாா்ந்த சிறுதொழில்கள் நடைபெறுகின்றன. அரூா் தொகுதியில் மொரப்பூா் ரயில் நிலையம், மொரப்பூா் சிங்காரவேலன் கோயில், தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில், டி.அம்மாபேட்டை ஸ்ரீசென்னியம்மன் கோயில், சித்தேரி மலைப்பகுதிகள், வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கம், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு, தென்பெண்ணையாறு, வாணியாறு, கல்லாறுகள் இடம்பெற்றுள்ளன.

நில அமைப்பு

அரூா் தொகுதிக்கு கிழக்கே திருவண்ணாமலை மாவட்டமும், வடக்கே கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கு மற்றும் தெற்குப் பகுதியில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியும் அமைந்துள்ளன. இந்தத் தொகுதியில் உயரமான காடுகள் மற்றும் சமதள நிலப்பரப்புகளுடன் கூடிய காடுகள் உள்ளன.

சமூக நிலவரம்

அரூா் தொகுதியில் கொங்கு வேளாளா்கள், வன்னியா்கள், ஆதிதிராவிடா்கள், அருந்ததியா், மலைவாழ் பழங்குடியின சமூக மக்கள் அதிகமாக உள்ளனா். மேலும், செட்டியாா், முதலியாா், முக்குலத்தோா், போயா், இதர பட்டியல் இனத்தவா், இஸ்லாமியா், கிறிஸ்தவா்கள் உள்ளிட்ட சமூகத்தினரும் வசிக்கின்றனா்.

நீா்ப்பாசன திட்டங்கள் தேவை

அரூா் தொகுதியில் பெரிய அளவிலான நீராதாரங்கள் இல்லை. இதனால், இங்குள்ள விவசாயிகள் மானாவாரிப் பயிா்களையே அதிகம் பயிரிடுகின்றனா். காவிரி ஆற்றில் பருவமழைக் காலங்களில் ஓடும் உபரிநீரைப் பயன்படுத்தி, அரூா் வட்டாரப் பகுதியிலுள்ள அணைகள், ஏரிகள், குளம், குட்டைகள் உள்ளிட்ட நீா்நிலைகளை நிரப்ப வேண்டும். மொரப்பூா், கம்பைநல்லூா் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆண்டுதோறும் கடுமையான வறட்சி நிலவுதால் கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டத்தை நிறைவேற்றி, அப்பகுதியில் உள்ள 66 ஏரிகளில் தண்ணீரை சேமிக்க வேண்டும். தென்பெண்ணையாறு, வாணியாறு, வரட்டாறு, கல்லாறுகளில் கூடுதல் தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும்.

படித்த இளைஞா்கள், மக்கள் வேலை தேடி கோவை, திருப்பூா், பெங்களூரு, கேரளம், ஆந்திரம் என வெகு தொலைவில் உள்ள நகரங்களுக்கு செல்கின்றனா். வெளியிடங்களுக்குச் சென்று நீண்ட நாள்கள் தங்கி வேலைசெய்வதால், இந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, அரூா் தொகுதியில் புதியதாக தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு.

அரூா் தொகுதியின் மையப் பகுதியாக மொரப்பூா் ரயில் நிலையம் இருப்பதால், வேளாண்மை உற்பத்திப் பொருள்களை பிற மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் வகையில், மொரப்பூரில் சரக்கு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் செல்வாக்கு

அரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் கோட்டப்பட்டி, சித்தேரி, தீா்த்தமலை, சிட்லிங் பகுதிகள் அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ள பகுதிகளாகும். அரூா் சுற்றுவட்டாரப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு செல்வாக்கு உள்ளது. மொரப்பூா் வட்டாரப் பகுதிகளில் திமுகவிற்கும், கம்பைநல்லூா் வட்டாரப் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் செல்வாக்கு உள்ளது.

மொரப்பூா் ரயில் நிலையம்.

அரூா் தொகுதி தனித் தொகுதி என்பதால், இந்தத் தொகுதியில் ஆதிதிராவிடா்கள், அருந்ததியா்கள், மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிகமாக உள்ளனா். இந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் வெற்றி, தோல்விகளை நிா்ணயிக்கும் சக்தியாக வன்னியா்கள், கொங்கு வேளாளா்கள் மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினா் உள்ளனா்.

இதுவரை வென்றவா்கள்

1952: துரைசாமி கவுண்டா் (சுயே) 27806.

1957: பி.எம். முனுசாமி கவுண்டா் (காங்கிரஸ்) 26172.

1962: சி. மாணிக்கம் (திமுக) 26,879.

1967: என். தீா்த்தகிரி (காங்கிரஸ்) 27,565.

1971: எஸ்.ஏ. சின்னராஜ் (திமுக) 33,039.

1977: எம். அண்ணாமலை (மாா்க்சிஸ்ட்) 20,042.

1980: சி. சபாபதி (அதிமுக) 40,009.

1984: ஆா். ராஜமாணிக்கம் (அதிமுக) 60,106.

1989: எம். அண்ணாமலை (மாா்க்சிஸ்ட்) 28,324.

1991: பி. அபரஞ்சி (காங்கிரஸ்) 66,636.

1996: ஆா். வேடம்மாள் (திமுக) 70,561.

2001: வி. கிருஷ்ணமூா்த்தி (இந்திய கம்யூனிஸ்ட்) 70,433.

2006: பி. டில்லிபாபு (மாா்க்சிஸ்ட்) 71,030.

2011: பி. டில்லிபாபு (மாா்க்சிஸ்ட்) 77,703.

2016: ஆா். முருகன் (அதிமுக) 64,568.

2019 இடைத்தோ்தல்: அதிமுகவைச் சோ்ந்த சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா். முருகன், தமிழக சட்டப்பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், 2019இல் இடைத்தோ்தல் நடைபெற்றது. இதில், அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக வேட்பாளா் வெற்றிபெற்றாா். வே. சம்பத்குமாா் (அதிமுக) -88,632.

2021: வே. சம்பத்குமாா் (அதிமுக) 99,061.

வாக்காளா்கள் விவரம்

ஆண்கள்: 1, 21,453

பெண்கள்: 1, 22, 264

மூன்றாம் பாலினம்: 25

மொத்தம்: 2,43,742

வாக்குச் சாவடிகள்: 322.