அரூர் மருத்துவமனையில் விண்ணப்பப் படிவம் தட்டுப்பாடு பிறப்பு சான்றிதழ் கிடைக்காமல் பெற்றோர் அவதி
அரூர், பிப். 1: அரூர் வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் விண்ணப்பப் படிவம் தட்டுப்பாடு காரணமாக பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் பெற்றோர் அவதியுறுகின்றனர். அரூர் அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் சராசரி
அரூர், பிப். 1: அரூர் வட்டார அரசு தலைமை மருத்துவமனையில் விண்ணப்பப் படிவம் தட்டுப்பாடு காரணமாக பிறப்புச் சான்றிதழ் பெறமுடியாமல் பெற்றோர் அவதியுறுகின்றனர்.
அரூர் அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் சராசரியாக 70 குழந்தைகள் பிறக்கின்றன. இம் மருத்துவமனையில் பிறந்து குழந்தைகளின் பிறப்பு பதிவுச் சான்றிதழ் கடந்த 2010 டிசம்பர் 10-ம் தேதி முதல் வழங்கப்படவில்லை.
பிறப்பு சான்றிதழ் விண்ணப்பப் படிவம் இல்லாத காரணத்தால் கடந்த 2 மாதங்களாக வழங்கப்படவில்லை என அரசு மருத்துவமனை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் பிறப்புப் பதிவுகளை மருத்துவமனையில் 21 நாட்களுக்கு பதிவு செய்து சான்று பெற வேண்டும். மருத்துவமனையில் பெறவில்லை எனில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் 30 தினங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் கடந்த 2 மாத காலம் பிறப்புச் சான்றிதழ் கிடைக்காத நிலையில் குழந்தை பிரசவித்த தாய்மார்கள் பலர் மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தில் கிடைக்கும் ஊக்கத்தொகை ரூ.700-ஐ பெறமுடியாமல் உள்ளனர்.
இதேபோல் தமிழக அரசின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் தொகை ரூ.6 ஆயிரம் நிதியுதவியும் பெறமுடியவில்லை என புகார் எழுந்துள்ளது.
அரூர் அரசு தலைமை மருத்துவமனையில் பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் தட்டுப்பாடு என்கிற நிலையிலும் அருகில் உள்ள தீர்த்தமலை, சின்னாங்குப்பம், கொங்கவேம்பு, மொரப்பூர் உள்ளிட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் மருத்துவமனையில் இருந்து வெளியேறும் தாய்மார்களிடம் உடனுக்குடன் வழங்குவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அரூர் அரசு மருத்துவமனையின் முதுநிலை குடிமுறை மருத்துவ அலுவலர் தீ.செல்வம் செவ்வாய்க்கிழமை கூறியது:
பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வருவாய்த்துறையின் மூலம் ஆண்டுதோறும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்ப படிவம் தேவை என வலியுறுத்தி பலமுறை கடிதம் கொடுத்தும் பலன் இல்லை. மேலும் பிறப்புச் சான்றிதழ் படிவங்களை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தலாம் என வருவாய்த் துறையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் படிவங்களின் உண்மை நகல் இருந்தால் மட்டுமே பிறப்புச் சான்று வழங்க முடியும்.
பிறப்புச் சான்றிதழ் படிவம் கிடைத்தவுடன் அரூர் அரசு மருத்துவமனையில் பிறந்துள்ள சுமார் 200 குழந்தைகளுக்கும் ஓரிரு தினங்களில் சான்று வழங்கப்படும் என்றார்.
"அரூர் அரசு மருத்துவமனைக்கு தேவையான பிறப்பு சான்றிதழ் படிவங்களை சம்பந்தப்பட்ட துறையின் மூலம் மாவட்ட அலுவலகத்தில் இருந்து பெற வேண்டும். ஆண்டுதோறும் முன்கூட்டியே விண்ணப்பப் படிவங்களைக் கேட்டு பெற வேண்டும்.
அரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பிறப்புச் சான்றிதழ் படிவங்களை தாற்காலிக நடவடிக்கையாக அரூர் அரசு மருத்துவமனைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என வட்டாட்சியர் இரா.நல்லுசாமி தெரிவித்தார்.