தருமபுரி

மீண்டும் அதிமுக கோட்டையானது கொங்கு மண்டலம்!

கோவை, மே 14: போட்டியிட்ட தொகுதிகளில் ஒரு இடத்தைத் தவிர அனைத்திலும் வெற்றி பெற்று 9 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை தன்வசப்படுத்தியுள்ளது அதிமுக. கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய கோவை, நீலகிரி, திரு

சிவ. மணிகண்டன்

கோவை, மே 14: போட்டியிட்ட தொகுதிகளில் ஒரு இடத்தைத் தவிர அனைத்திலும் வெற்றி பெற்று 9 மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தை தன்வசப்படுத்தியுள்ளது அதிமுக.

கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் 42-ல் அதிமுக போட்டியிட்டது. மற்ற தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிட்டன. இதில் கரூர் மாவட்டத்தின் அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறது.

அதிமுகவின் கூட்டணிக் கட்சிகள் 20 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் 15-ல் வெற்றி பெற்றுள்ளன. மொத்தத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் 61 தொகுதிகளில் 55 தொகுதிகள் அதிமுக வசம் வந்துள்ளது.

கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு செல்வாக்குள்ள பகுதியாகவே கருதப்பட்டுவருகிறது. இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுகவுக்கு நல்ல வெற்றியை கொங்கு மண்டலம்  கொடுத்திருக்கிறது.

2001 தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளில், ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோயில் தொகுதியைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி வாகை சூடியது. கொங்கு மண்டலத்தில் 38 தொகுதிகளில் வென்றது. சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஒன்பது தொகுதிகளிலும், கோவை மாவட்டத்தில் 8 தொகுதிகளையும் கைப்பற்றியது.

2006-ல் அதிமுக தோல்வியைச் சந்தித்தபோதும், வெற்றி பெற்றவர்களில் அதிக உறுப்பினர்கள் கொங்கு மண்டலத்தில் இருந்துதான் சென்றார்கள். மொத்தம் 48 தொகுதிகளில் போட்டியிட்டு 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் (தற்போதைய திருப்பூர் மாவட்டம் உள்பட) மொத்தம் உள்ள 15 தொகுதிகளில் 9-ல் அதிமுக வெற்றி பெற்றது. திமுக 3 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. இதன் காரணமாக, திமுக அமைச்சரவையில் கோவை மாவட்டத்துக்கு பிரதிநிதித்துவம் தரப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவையில் கோவை மாவட்டத்துக்கு இடம் ஒதுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 2009 மக்களவைத் தேர்தலிலும் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியது.

பேரவை, மக்களவைத் தேர்தல்களில் பின்னடவைச் சந்தித்த நிலையில், கொங்கு மண்டலத்தின் மீது திமுக அதிக கவனம் எடுத்துக் கொண்டது. இதன் ஒரு பகுதியாகவே கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது.

இந்த மாநாடு முடிந்த சில நாள்களிலேயே கோவையில் பொதுக்கூட்டத்தை அறிவித்து, அப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்குமாறு தொண்டர்களைக் கேட்டுக் கொண்டார் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா.

பல்வேறு காலகட்டங்களிலும் அரசியலில் திருப்புமுனைகளை ஏற்படுத்தியதில் கோவைக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. இந்த வரிசையில் கோவையில் நடத்திய பொதுக்கூட்டம் அதிமுகவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இச்சூழலில் கூட்டணி பலமும், ஆளுங்கட்சி மீதான அதிருப்தி அலையும் அதிமுகவுக்கு மேலும் சாதகமாக இருந்தன.

இதுஒருபுறமிருக்க, திமுக தனக்கு வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்ததும், வேட்பாளர் தேர்வில் கட்சியினருக்கு ஏற்பட்ட அதிருப்தியும் அதிமுகவுக்கு மேலும் வாக்குகளை அள்ளிக் கொடுத்துள்ளது.

ஜாதிக் கட்சியான கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தை தனது கூட்டணியில் இணைத்துக் கொண்ட திமுக, பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ள தொகுதிக்கு, அச்சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை. உதாரணத்துக்கு கோவை மாவட்டத்தில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள் அனைவருமே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தங்களது சமூகத்தவர் ஒருவருக்குக் கூட வாய்ப்பு இல்லையே என்ற ஆதங்கத்தை பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்க முடிந்தது.

கொங்கு மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் ஆறு மாவட்டங்களில் திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. நீலகிரி மாவட்டம் குன்னூர், கூடலூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஆகிய 4 தொகுதிகள் மட்டுமே தற்போது திமுக வசம் இருக்கிறது. அதேபோல ஓசூரில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கிறது.

2001-ல் ஆட்சிக்கு வந்தபோது கொங்கு மண்டலத்தை தன்வசம் வைத்திருந்ததைப் போல, இம்முறையும் 9 மாவட்டங்களிலும் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறது அதிமுக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

சமந்தாவின் மா இன்டி பங்காரம் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT