முகப்பு
தருமபுரி

சேலம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியீடு

சேலம், செப். 20: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர். உள்ளாட்சித் தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்கள்,

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:34 PM
பகிர்:

சேலம், செப். 20: சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி பல்வேறு மாவட்டங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சேலத்தில் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் புகைப்படங்கள் இல்லாத நிலையிலேயே வாக்காளர் பட்டியலை வெளியிடும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் வெளியிட்டார். இதை நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஏ.எம்.முகமது ஜாபர் பெற்றுக் கொண்டார். இதேபோல் சேலம் மாநகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆணையர் லட்சுமிப்ரியா வாக்காளர் பட்டியலை வெளியிட உதவி ஆணையர் நெப்போலியன் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம் கூறியது:

வாக்காளர் பட்டியல்படி சேலம் மாவட்டத்தில் 11,74,832 ஆண், 11,37,928 பெண், 83 இதர வாக்காளர்கள் என மொத்தம் 23,12,843 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்காக சேலம் ஊரகப் பகுதியில் 2,623 வாக்குச்சாவடிகளும், நகர்ப் புறங்களில் 1,337 வாக்குச்சாவடிகளுமாக மொத்தம் 3,960 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

இங்கு வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல், ஊராட்சி மன்ற அலுவலகம், ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சிக் குழு அலுவலகம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் பார்வையிட்டு ஏதேனும் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் முறைப்படி தெரிவிக்கலாம்.

தேர்தல் குறித்த விவரங்களை 0427-2414200 என்ற தொலைபேசியில் கேட்டறியலாம் என்றார்.

மாநகராட்சி ஆணையர் லட்சுமிப்ரியா கூறும்போது, சேலம் மாநகராட்சியில் உள்ளாட்சித் தேர்தலுக்காக 4 மண்டலங்களிலும் 626 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவை செய்ய விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இறுதி நாள் வரை மனுக்கள் வழங்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.