அரூர் அருகே கார் மரத்தில் மோதியதில் இளைஞர்கள் 3 பேர் பலி
அரூர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் இளைஞர்கள் 3 பேர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர்.
அரூர் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் இளைஞர்கள் 3 பேர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர்.
அரூர் வட்டம், எச்.அக்ராஹரம் கிராமத்தைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி அகமத் பாஷா மகன் சலீம் பாஷா (28) . இவர் தமது நண்பர்களான மேல்பாட்சாபேட்டையைச் சேர்ந்த ஆசாத் மகன் குலாப் (27), எச். அக்ராஹரத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் ஏகநாதன் (32), அதே ஊரைச் சேர்ந்த அக்பர் பாஷா மகன் இஸ்மாயில் (29), பச்சினாம்பட்டியைச் சேர்ந்த உமர் பாஷா மகன் சுல்தான் (28) ஆகியோருடன், ஒரு காரில் மொரப்பூர்-அரூர் சாலையில், திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் அரூர் நோக்கி வந்துள்ளனர்.
அப்போது, காரை சலீம் பாஷா ஓட்டி வந்துள்ளார். வரும் வழியில், எச். அக்ராஹரம் அருகேயுள்ள புதிய நகர் எனுமிடத்தில், சாலையின் வளைவான பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில், காரின் ஓட்டுநர் சலீம் பாஷா (28), குலாப் (27) ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தொடர்ந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஏகநாதன் (32) உயிரிழந்தார்.
இதையடுத்து, பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இஸ்மாயில் (29), சுல்தான் (28) ஆகிய இருவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.