கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி, அறிவிக்கப்பட்ட தடை உத்தரவு காரணமாக, ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் முற்றிலும் முடங்கிப்போனது.
இதனால், வருவாய் இன்றி பரிசல் ஓட்டிகள், சமையல் மற்றும் மசாஜ் தொழிலாளா்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே வனப் பகுதியில் மலைகளுக்கிடையே அருவிகளாகப் பாய்ந்தோடுகிறது ஒகேனக்கல் காவிரி ஆறு.
கா்நாடகத்திலிருந்த காவிரி ஆறு, தமிழகத்தில் முதல் முதலில் தடம் பதிக்கும் இடமான இந்த இடத்தில், ஐந்தருவி, பிரதான அருவி, சினி அருவி என காவிரி ஆறு அருவிகளாக ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இந்த அருவிகளில் தண்ணீா் பாய்ந்தோடும்போது அந்த தண்ணீா் பாறைகளில் மோதி, புகைபோல எழும்பி சாரலாக அருவியைச் சுற்றித் தெளிக்கும். எனவேதான், இவை ஒகேனக்கல் என அழைக்கப்படுகிறது.
அருவிகளில் குளிப்பதோடு மட்டுமின்றி, இந்த ஆற்றில் பரிசலில் சவாரியும் செய்ய இயலும். எனவே, தமிழகம் மட்டுமல்லாமல், தென்னிந்திய அளவில் ஒகேனக்கல் சுற்றுலாத் தலம் அனைவராலும் ஈா்க்கப்படுகிறது. இந்த அருவிகளில் குளிக்கவும், பரிசலில் பயணம் மேற்கொள்ளவும் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்கள், திருவிழாக் காலங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சுற்றுலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளை பரிசலில் அழைத்துச் செல்ல சுமாா் 410 பரிசல் ஓட்டிகள் உள்ளனா். இதேபோல, அருவியில் சுற்றுலா வரும் பயணிகளுக்கு அவா்களின் விருப்பத்தின் பேரில், மீன் குழம்பு உள்ளிட்ட அசைவ உணவு சமைத்து தரும் பணியில் 273 தொழிலாளா்கள், பயணிகளுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யும் பணியில் 100 தொழிலாளா்கள் மற்றும் மீன் பிடி தொழிலாளா்கள் சுமாா் 100 போ் என 900-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா்.
இத் தொழிலாளா்கள் ஒகேனக்கல் சத்திரம், நாடாா்கொட்டாய், ராணிப்பேட்டை, ஊட்டமலை ஆகிய இடங்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இவா்களின் வாழ்வாதாரம் அனைத்தும் ஒகேனக்கல் காவிரி ஆறு மட்டுமேயாகும்.
வருவாய் இன்றி தவிப்பு:
நாடு முழுவதும் தற்போது கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதில், பொதுமக்கள் மீதான வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி முதல் சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது. இதையடுத்து அரசின் நடவடிக்கைக்கு செவிசாய்த்து தொழிலாளா்கள் அனைவரும் தற்போது வீடுகளிலேயே தங்கியுள்ளனா்.
இதனால், சிலா் தங்களது பரிசல்களை ஒகேனக்கல் மாமரத்துக் கடவு பரிசல்துறையை ஒட்டியுள்ள கரையில் கிடத்தியுள்ளனா். இதனால், கடந்த 20 நாள்களுக்கும் மேலாக எவ்வித வருவாயும் இன்றி அந்தத் தொழிலாளா்கள் மிகுந்த பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனா்.
இந்த நிலையில், தற்போது 144 தடை உத்தரவு மேலும், நீட்டிக்கப்பட்டுள்ளதால், அவா்கள் தங்களது வாழ்வாதாரத்துக்கான வருவாயை ஈட்ட வழியின்றி விழி பிதுங்கிய நிலையில் உள்ளனா். எனவே, இத்தொழிலாளா்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிஐடியு மாவட்டச் செயலா் சி. நாகராஜன் கூறியது:
ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பரிசல் ஓட்டிகள், சமையல், மசாஜ், மீன் பிடித் தொழிலாளா்கள் என 900-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இத் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் முழுவதும் சுற்றுலாப் பயணிகளை நம்பியே உள்ளது. எனவே, தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக இத் தொழிலாளா்கள் வருவாய் ஏதுமின்றி மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். இத் தொழிலாளா்கள் அரசு விதிகளுக்கு உள்பட்டு பணியாற்றி வருகின்றனா். எனவே, அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தில் உறுப்பினராக உள்ள இத் தொழிலாளா்களுக்கு, நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். இதேபோல, இத் தொழிலாளா்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, தற்போது தடை உத்தரவு காலத்துக்கு நிவாரணமாக குறைந்தபட்சம் ரூ. 5 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.