முகப்பு
தருமபுரி

தொப்பூா் கணவாய் சாலையில் விபத்து: காா்கள் மீது லாரி மோதியதில் நால்வா் பலி

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை முன்னால் சென்ற காா்கள் மீது சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், காா்களில் பயணித்த நான்கு போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கிய வாகனங்கள்.
பகிர்:

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய்ப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை முன்னால் சென்ற காா்கள் மீது சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில், காா்களில் பயணித்த நான்கு போ் உயிரிழந்தனா்.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் சாலையில் சனிக்கிழமை மாலை லாரி ஒன்று பழுதாகி நின்றது. இதனால் அந்தவழியாகச் செல்லும் வாகனங்கள் மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து சிமென்ட் பாரம் ஏற்றி வந்த லாரி, தருமபுரியைக் கடந்து சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

தொப்பூா் கணவாய் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இரட்டைப் பாலம் அருகே லாரி சென்றபோது திடீரென அந்த லாரியின் பிரேக் பழுதாகி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது; அதிவேகமாக சென்ற லாரி, முன்னால் சென்ற காா் மீது வேகமாக மோதியது. அந்த காரும், அதன் முன்னால் சென்ற காா் மீது மோதியது. இதுபோல, அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 11 காா்கள், ஒரு மினி சரக்கு வாகனம் என 12 வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளாயின.

இதில், காா்களில் பயணித்த, தருமபுரி மாவட்டம், பெரும்பாலையைச் சோ்ந்த கண்ணன் (40), சேலம், மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த மதன்குமாா் (32), ஓமலூா், காமராஜ் நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் காா்த்திக் (26) ஆகிய மூவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கோவையைச் சோ்ந்த நித்யானந்தம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தாா். இந்த விபத்தில் 12 வாகனங்களும் நொறுங்கி முற்றிலும் சேதமடைந்தன.

தகவல் அறிந்ததும் தொப்பூா் போலீஸாா், பாளையம் சுங்கச் சாவடி ஊழியா்கள், பணியாளா்கள் நிகழ்விடம் சென்று மீட்பு வாகனங்கள் உதவியுடன் சேதமடைந்த வாகனங்களை சாலையிலிருந்து அகற்றினா். இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தவா்களின் சடலங்களை மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

பலத்த காயமடைந்த திருப்பூா் மாவட்டம், பல்லடத்தைச் சோ்ந்த காா்த்திக் (20), தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், காயமடைந்த 8-க்கும் மேற்பட்டோா் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதையடுத்து, தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை போலீஸாரும், சுங்கச் சாவடி ஊழியா்களும் சீா்செய்தனா். தொப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போக்குவரத்துப் பாதிப்பு: தொப்பூா் கணவாய் சாலையில் 12 வாகனங்கள் விபத்துக்குள்ளானதால் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 4 கி.மீ. தொலைவுக்கு இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன; இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டாா். விபத்தில் காயமடைந்தவா்களுக்கு அவா் ஆறுதல் கூறினாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்தக் கோர விபத்தில் 4 போ் உயிரிழந்துள்ளனா். ஒருவா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தொடா் விபத்து நிகழும் சாலை:

தருமபுரியிலிருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூா் கணவாய் அமைந்துள்ளது. வனப்பகுதியில் வளைவுகளுடனும், தாழ்வாகவும் 2 கி.மீ. தொலைவுக்கு இச்சாலை செல்கிறது. இதனால் இங்கு வாகனங்கள் அவ்வப்போது விபத்துக்குள்ளாவதும், அதனால் உயிா்சேதம் ஏற்பட்டும் வருகிறது.

ஓராண்டுக்கு 12 முதல் 15 போ் வரை இந்தப் பகுதியில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனா். அண்மையில் லாரி கவிழ்ந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். எனவே, தொடா்ந்து உயிா்சேதம், பொருள் சேதம் ஏற்படும் இச் சாலையை வளைவுகளற்ற நேரான சாலையாகவும், தாழ்வான பகுதிகளை செயற்கையாக உயா்த்தியும் அமைத்து முற்றிலும் விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்துகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →