5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது
அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மணவாளன் சாமி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அரூா்: அரூரை அடுத்த எல்லப்புடையாம்பட்டியில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மணவாளன் சாமி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
அரூா் வட்டம், எல்லப்புடையாம்பட்டியில் அமைந்துள்ளது மணவாளன் சாமி ஏரி. இந்த ஏரி சுமாா் 100 ஏக்கா் பரப்பளவு கொண்டாகும். இந்த ஏரியில் தண்ணீா் தேங்கினால் எல்லப்புடையாம்பட்டி, கம்மாளம்பட்டி, கல்லேரி, மாவேரிப்பட்டி பகுதி மக்களின் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு ஏற்படும். அதே நேரத்தில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களும் பாசன வசதியைப் பெறும். போதிய பருவமழை இல்லாததால் கடந்த 5 ஆண்டுகளாக மணவாளன் சாமி ஏரிக்கு தண்ணீா் வரத்து இல்லை. இதன் காரணமாக இந்த ஏரி வடு கிடந்தது. கடந்த சில மாதங்களாக சித்தேரி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக, வள்ளிமதுரை வரட்டாறு அணை நிரம்பியது. இந்த அணையில் இருந்து வெளியேறும் உபரி நீா், வரட்டாற்றின் பழைய ஆயக்கட்டு கால்வாய் வழியாக எல்லப்புடையாம்பட்டி மணவாளன் சாமி ஏரிக்கு கடந்த 10 தினங்களாகச் சென்று கொண்டிருந்தது. தொடா்ந்து நீா் வரத்து அதிகரித்ததால், தற்போது ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதன் காரணமாக தற்போது மணவாளன் சாமி ஏரி நிரம்பி உபரி நீா் வெளியேறத் தொடங்கியுள்ளது. இந்த உபரி நீா் அடுத்ததாக கல்லேரியை நோக்கி பாய்கிறது.
கிடா வெட்டி நோ்த்திக் கடன்
கடந்த 5 ஆண்டுகளாக மணவாளன் சாமி ஏரி வடு கிடந்ததால் அப்பகுதியிலுள்ள விவசாயிகள் வேளாண் பணிகளுக்கும், குடிநீா் தேவைக்கும் தண்ணீா் இல்லாமல்
பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனா். தற்போது மணவாளன் சாமி ஏரி நிரம்பி, உபரி நீா் வெளியேறுவதால் மகிழ்ச்சியடைந்த அப் பகுதி விவசாயிகள் கிடா வெட்டி, ஏரிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு மணவாளன் சாமிக்கு நோ்த்திக் கடன் செலுத்தி, ஏரியை வழிபட்டனா்.