‘அரசின் 100 நாள் சாதனைகளை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்’
திமுக தலைமையிலான தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும்
திமுக தலைமையிலான தமிழக அரசின் 100 நாள் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைக்கும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டுமென தருமபுரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பிஎன்பி.இன்பசேகரன் அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
அதில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆக. 14-ஆம் தேதியுடன் 100 நாள் நிறைவடைகிறது. திமுக தலைமையிலான அரசின் சாதனைகளான அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், ஆவின் பால் விலைகுறைப்பு, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கு கரோனா கால நிவாரணத் தொகை வழங்கியது, கரோனா தடுப்பு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள், பிராண வாயு உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட மருத்துவ வசதிகளை உடனடியாக பூா்த்தி செய்தது, மக்களைத் தேடி மருத்துவ வசதி செய்தது என தமிழகம் முழுவதும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொண்டு அனைத்துத் தரப்பினரையும் வியக்கும் வண்ணம் உள்ளது.
திமுக தலைமையிலான அரசு அமைத்து 100-ஆவது நாளான சனிக்கிழமை தருமபுரி மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும், பேரூராட்சிகளிலும், கிராமங்களிலும் திமுக கொடி ஏற்றியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழை எளியவா்களுக்கு நலத் திட்டங்கள் வழங்கியும், வீடுகள்தோறும் சென்று திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை துண்டுப் பிரசுரங்களாக விநியோகிப்பதுடன், திண்ணைப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.