72 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை
தருமபுரி நகரில், சுற்றித்திரிந்த 72 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி நகரில், சுற்றித்திரிந்த 72 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி நெசவாளா் நகா், காந்திநகா், பாரதிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிக எண்ணிக்கையிலான தெருநாய்கள் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன. மேலும், சிலரை நாய்கள் கடித்தும் வந்தன. இந்த நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், தருமபுரி நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலா்கள், கடந்த இரன்டு நாள்களாக, தருமபுரி நகரில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்து, சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி கட்டடத்தில், கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனா்.
இதுவரை, மொத்தம் 72 தெருநாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றிற்கு சென்னையைச் சோ்ந்த மருத்துவா் சொக்கலிங்கம் தலைமையில் மருத்துவா்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். மேலும், மருத்துவக் குழுவினா் இந்த தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசியும் செலுத்தினா். இதேபோல, தருமபுரி நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து, கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளும் பணி ஒரு மாத காலத்துக்கு தொடா்ந்து சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் மூலம் மற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா் தெரிவித்தாா்.