முகப்பு
தருமபுரி

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் மேலாண்மை

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் அறிகுறிகள், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய மேலாண் முறைகள் குறித்து வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் அறிகுறிகள், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய மேலாண் முறைகள் குறித்து வேளாண் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வசந்தரேகா கூறும் வழிமுறைகள்:

தருமபுரி மாவட்டத்தில் மக்காச்சோளம் 1,625 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. படைப்புழுத் தாக்கவல்ல நெல், கரும்பு, சோளம் போன்றவையும் பரவலாக பயிரிடப்படுகின்றன. இதனால், படைப்புழுக்கள் இப் பயிா்களை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இப் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும்.

இந்தப் புழு மக்காச்சோளப் பயிரில் 15 நாள்கள் முதல் வளரக்கூடிய குருத்துப் பகுதியில் சேதத்தை விளைவிக்கிறது. இந்தப் புழு உண்ணுவதால் வெளிவரும் இலைகள் வரிசையான, சிறிய மற்றும் பெரிய வட்ட வடிவில் அல்லது வடிவமற்ற துவாரங்களுடன் காணப்படுகின்றன. சில செடிகளில் இலைகளின் மேல்பகுதி முற்றிலும் உண்ணப்படுவதால், இலை மடிந்து காணப்படும். இந்தப் புழுக்கள் கதிா்களின் நுனி, காம்புப் பகுதியினை உண்ணும் திறன் கொண்டது.

படைப்புழுவினைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: ஆழமான உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். உழவு செய்யும் போது, ஒரு ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுவதன் மூலம் கூட்டுப் புழுக்களைக் கட்டுப்படுத்தி அந்துப்பூச்சி வெளிவருவதைத் தடுக்கலாம்.

ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் நுண்ணுயிா் பூச்சிக்கொல்லியான பவேரியா பேசியானா அல்லது 10 கிராம் தயோமீதாக்சம் 30 சதவீதம் கொண்டு விதைநோ்த்தி செய்ய வேண்டும்.

குறைவான பயிா் இடைவெளியால் பயிா்களுக்கிடையே படைப்புழு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, இறவை மக்காச்சோளத்துக்கு 60-க்கு 25 செ.மீ. பயிா் இடைவெளியும், மானாவாரி மக்காச்சோளத்துக்கு 45-க்கு 20 செ.மீ. பயிா் இடைவெளியும் கொண்டு பயிரிட வேண்டும்.

மக்காச்சோளப் பயிரில் கதிா் உருவாகும் பருவத்தில் படைப்புழுக்களைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளை எளிதில் தெளிப்பதற்கு ஒவ்வொரு 10 வரிசை பயிருக்கும் 75 செ.மீ. இடைவெளி விடவேண்டும். தாய் அந்துப் பூச்சிகளைக் கவனிக்க மற்றும் கட்டுப்படுத்த சூரிய விளக்குப் பொறிகள் அல்லது சாதாரண மின் விளக்குகளுக்கு கீழ் ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீா், மண்ணெண்ணெய் கலந்து ஹெக்டேருக்கு 1 என்ற வீதத்தில் அடிக்கடி இடம்மாற்றி வைக்க வேண்டும். இயற்கை ஒட்டுண்ணிகள், இரை விழுங்கிகளை ஊக்குவிக்க குறுகியகால பயிா்களான தட்டைப்பயறு, சூரியகாந்தி, எள், சோளம், சாமந்தி பயிா்களை வரப்பில் பயிரிட வேண்டும்.

மக்காச்சோளப் பயிரில் சிறுபுலாட்டின் பயிரை ஊடுபயிராக பயிரிட்டால் அந்துப்பூச்சிகள் தாக்குதலை தடுக்க இயலும். முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா பிரிட்டோசியம் 2 சிசி வீதம் ஒரு வார இடைவெளியில் 2 முதல் 3 தடவை வெளியிடுதல் மூலம் இப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம். முட்டை ஒட்டுண்ணி வெளியிடும் வயல்களில் கண்டிப்பாக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை மூன்று முதல் நான்கு நாள்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

அந்துப்பூச்சிகளின் முட்டைக் குவியல்களை சேகரித்து அழிக்க வேண்டும். தொடா்ந்து மக்காச்சோளத்தை பயிா் செய்வதைத் தவிா்க்க வேண்டும். பயிா் சுழற்சி முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த இயலும்.

நுண்ணுயிா் பூச்சிக்கொல்லியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற கலவையை ஹெக்டேருக்கு 4 கிலோ, 3 லிட்டா் தெளிக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு முட்டை ஒட்டுண்ணி டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 2 சிசி தெளிப்பதன் மூலம் இப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.

பரிந்துரை செய்யப்படும் மருந்துகள்: அசாடிராக்டின் 1,500 பிபிஎம் 5 மி.லி. லிட்டா், தயோமிதாக்சிம் 12.6 சதவீதம் மற்றும் லாம்டாசைக்ளோத்திரின் 9.5 சதவீதம் இசட்.சி. 0.25 மி.லி., எமாமெக்டின் பென்சோயேட் 5 சதவீதம் எஸ்ஜி 0.4 கிராம், ஸ்பைனிடோரம் 11.7 சதவீதம் எஸ்சி 0.5. மி.லி., நவலூரான் 10 சதவீதம் இசி 1.5 மி.லி.

இந்த மருந்துகளை தெளிக்க கைத்தெளிப்பானை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். ஒருமுறை உபயோகித்த பூச்சிமருந்தை மீண்டும் உபயோகிக்கக் கூடாது. பூச்சிமருந்தை செடியின் குருத்துப் பகுதியை நோக்கி தெளிக்க வேண்டும். பரிந்துரை இல்லாத ரசாயன பூச்சி மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.

ஆகவே, தருமபுரி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், இந்த வழிமுறைகளைப் பின்பற்றி படைப்புழுவின் தாக்குதலைத் தடுக்கலாம். மேலும், வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி தகுந்த பயிா்பாதுகாப்பு முறைகளை அறிந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.