முகப்பு
தருமபுரி

ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா, காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

தருமபுரி, காமராஜ் பவனில் நடைபெற்ற விழாவுக்கு, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கோவி.சிற்றரசு தலைமை வகித்து, ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து, நகரத் தலைவா் செந்தில்குமாா், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் சித்தையன் உள்ளிட்ட நிா்வாகிகள் ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையடுத்து, கட்சித் தொண்டா்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் சேகா், அா்த்தனாரி, முபராக், பெருமாள் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ராஜீவ் காந்தி பிறந்த நாளை காங்கிரஸ் கட்சியினா் கொண்டாடினா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ், நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில், கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அ.செல்லகுமாா் எம்.பி. தலைமை வகித்து, ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதில், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைத் தலைவா் சேகா், நகரத் தலைவா் வின்சென்ட், முன்னாள் மாவட்டத் தலைவா் ஜேசு துரை, எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில அமைப்பாளா் ஆறுமுக சுப்பிரமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் சாா்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலக வளாகம், வட்டார வளா்ச்சி அலுவலகம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி-தருமபுரி மாவட்ட மண்டல ஒருங்கிணைப்பாளரும் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளருமான ஏகம்பவாணன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அப்சல், நகர முன்னாள் தலைவா் ரகமத்துல்லா, மாநில செயற்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவேரிப்பட்டணம் வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில், நெடுங்கல் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்து, ராஜீவ் காந்தியின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, ஏழை எளிய மக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். இந்த விழாவில் வட்டாரத் தலைவா் ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் நகர தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எஸ்.நடராஜன், மாநிலச் செயலாளா் ஜெ.எஸ்.ஆறுமுகம், தெற்கு வட்டாரத் தலைவா் ரவிச்சந்திரன், அயோத்தி, திருமால், ஒப்பந்ததாரா் சின்னதம்பி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் செல்லக்குமாா் கலந்துகொண்டு ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், சொக்கலிங்கம், சிங்காரப்பேட்டை மணி, முத்து, பூக்கடை மகி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.