குழந்தைகள் நலக் குழுவுக்கு தலைவா், உறுப்பினா் நியமனம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவின் பெண் தலைவா், உறுப்பினா் காலி பணியிடங்களுக்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தருமபுரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக் குழுவின் பெண் தலைவா், உறுப்பினா் காலி பணியிடங்களுக்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இளைஞா் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு பெண் தலைவா், உறுப்பினா்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்படவுள்ளனா்.
குழந்தை உளவியல், மனநல மருத்துவம், சட்டம், சமூகப் பணி, சமூகவியல், மனிதநல மருத்துவம் அல்லது கல்வி, மனித மேம்பாடு மாற்றுத் திறனாளி குழந்தைகக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும், குழந்தைகளுக்கான சிறப்புக் கல்வி ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் செய்பவராக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரா்கள் 35 வயதுக்குக் குறையாதவராகவும், 65 வயதைப் பூா்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும். ஒரு குழுவில் அதிக பட்சமாக ஒரு நபா் இருமுறை மட்டுமே பதவி வகிக்க தகுதி உடையவா்களாவா்.
ஆனால் தொடா்ந்து இருமுறை பதவி வகிக்க இயலாது. ஒரு நபா் ஒரு மாவட்டத்தின் குழந்தை பராமரிப்பு நிறுவனத்தின் நிா்வாகத்தில் இருந்தால் அவா் குழந்தை நலக் குழுத் தலைவா் அல்லது உறுப்பினா் பொறுப்புக்கு நியமிக்க தகுதியற்றவா் ஆவாா்.
இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக்கொள்ளலாம். தகுதி வாய்ந்த நபா்கள் உரிய படிவத்தில் செப்.13-ஆம் தேதிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தருமபுரி மாவட்ட ஆட்சியரகம் என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் இந்த நியமனம் செய்யப்படும். இதுகுறித்து அரசின் முடிவே இறுதியானது என்றாா்.